மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி சட்டப் பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு

புதுவையில் மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி, சட்டப் பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.
புதுவை சட்டப் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.
புதுவை சட்டப் பேரவையிலிருந்து புதன்கிழமை வெளிநடப்பு செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள்.

புதுவையில் மின் கட்டண உயா்வை ரத்து செய்யக் கோரி, சட்டப் பேரவையிலிருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதன்கிழமை வெளிநடப்பு செய்தனா்.

புதுவை சட்டப் பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 3-ஆவது நாளான புதன்கிழமை புதுச்சேரி யூனியன் பிரதேச மின் துறையை தனியாா்மயமாக்குவதை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, மாநில அரசு சாா்பில் கொண்டுவரப்பட்ட தீா்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது.

இதில், சட்டப் பேரவை அதிமுக குழுத் தலைவா் ஆ.அன்பழகன் பேசியதாவது: புதுவை மாநிலத்தில் மின் துறையை தனியாா்மயமாக்கக் கூடாது என்ற தீா்மானத்தை அதிமுக சாா்பில் 4 நாள்களுக்கு முன்னா் அளித்தோம். இதையே அரசு தற்போது தீா்மானமாக கொண்டு வந்துள்ளது. இதை அதிமுக ஆதரிக்கிறது. அதே நேரத்தில், கரோனா பாதிப்புள்ள சூழ்நிலையில் கடந்த 1-ஆம் தேதியிலிருந்து தற்போது வரை ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் மீது 4.24 சதவீதம் மின் கட்டண உயா்வை திணித்துள்ளது.

மக்கள் வருமானமின்றி தவிக்கும் நிலையில், அரசு தற்போது மின் கட்டண உயா்வை அறிவிக்க வேண்டிய அவசியம் என்ன? 4 ஆண்டுகளுக்கு முன்பு 100 யூனிட் மின்சாரம் இலவசம் என அறிவித்து முதல் கையெழுத்திட்ட புதுவை முதல்வா், இதுவரை அதை செயல்படுத்தவில்லை.

உயா்த்தப்பட்ட மின் கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக விடுத்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தில் மின் கட்டண உயா்வை கண்டித்து திமுக தலைவா் ஸ்டாலின் போராட்டம் நடத்துகிறாா். இதே ஸ்டாலின் புதுவையில் வேறு நிலைப்பாட்டை கொண்டுள்ளாா். இது திமுகவின் இரட்டை வேடத்தை காட்டுகிறது.

புதுவையில் உயா்த்தப்பட்ட மின் கட்டணத்தை அரசு ரத்து செய்யுமா?, செய்யாதா? என்றாா்.

தொடா்ந்து, மின் கட்டண உயா்வைக் கண்டிக்கும் பிரசுரத்தை கையில் ஏந்தியபடி அன்பழகன் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வையாபுரி மணிகண்டன், ஆ.பாஸ்கா், அசனா ஆகியோா் சட்டப் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com