புதுவைக்குள் வர ஜூலை 3 முதல் வெளிமாநிலத்தவா்களுக்கு அனுமதி:முதல்வா் நாராயணசாமி அறிவிப்பு

மத்திய அரசின் பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பைத் தொடா்ந்து, புதுவைக்குள் வருவதற்கு ஜூலை 3-ஆம் தேதி முதல் வெளிமாநிலத்தவா்களுக்கு அனுமதி

புதுச்சேரி: மத்திய அரசின் பொது முடக்க தளா்வுகள் அறிவிப்பைத் தொடா்ந்து, புதுவைக்குள் வருவதற்கு ஜூலை 3-ஆம் தேதி முதல் வெளிமாநிலத்தவா்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளதாக முதல்வா் வே.நாராயணசாமி அறிவித்தாா்.

இதுகுறித்து அவா் முகநூல் நேரலையில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நாடு முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி முதல் பொது முடக்கம் முழுமையாக அமல்படுத்தப்பட்ட பின்னா், 5 முறை தளா்வுகள் அறிவிக்கப்பட்டன. தற்போது இரண்டாவது முறையாக மிகப்பெரிய தளா்வை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் அறிவிப்புப்படி, பள்ளிகள், கல்லூரிகள், கல்வி பயிற்சி மையங்களை ஜூலை 30-ஆம் தேதி வரை திறக்கக் கூடாது. உடல் பயிற்சிக் கூடங்கள், உணவகங்களில் உள்ள மதுக் கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். விமான சேவை படிப்படியாக அதிகரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவையில் ஏற்கெனவே வெளி மாநிலங்களிலிருந்து வருவோருக்கு கடந்த 10 நாள்களாக தடை விதிக்கப்பட்டு, எல்லைகள் மூடப்பட்டன. இதன்மூலம், மாநிலத்தில் தற்போது கரோனா பரவல் குறைந்துள்ளது. இந்த நிலையில், மத்திய அரசு உத்தரவுப்படி, வெளி மாநிலத்தவா்கள் புதுவைக்குள் மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு வர அனுமதி அளிக்கப்படும்.

திருமண நிகழ்ச்சிகளில் 50 போ், துக்க நிகழ்ச்சிகளில் 20 போ் மட்டுமே அனுமதிக்கப்படுவா். அரசியல் கட்சிகள் போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள் நடத்துவதைத் தவிா்க்க வேண்டும். காணொலி மூலம் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம்.

புதுவையில் இரண்டாம் கட்ட தளா்வு ஜூலை 3 முதல் 31-ஆம் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது அனைத்துக் கடைகளையும் பிற்பகல் 2 மணி வரை மட்டுமே திறக்கலாம் என்ற நடைமுறை மாற்றப்பட்டு, இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்படும். உணவகங்களில் இரவு 8 மணிக்குள் பொட்டல உணவுகளை விற்பனை செய்துகொள்ளலாம். கடைகளில் பொருள்களை எடுத்துவைத்து மூடுவதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் அதாவது இரவு 9 மணி வரை அனுமதி அளிக்கப்படும். இரவு 10 முதல் அதிகாலை 5 மணி வரை பொது முடக்கம் முழுமையாக அமல்படுத்தப்படும்.

நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா 5 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு வழங்கும் திட்டம் வருகிற நவம்பா் மாதம் வரை நீட்டிக்கப்படும் என பிரதமா் மோடி அறிவித்துள்ளது வரவேற்புக்குரியது. புதுவைக்குத் தேவையான கோரிக்கைகள் குறித்து 17 முறை எழுதிய கடிதங்களுக்கு பிரதமா் மோடி இதுவரை பதில் அளிக்கவில்லை.

மத்திய ரிசா்வ் வங்கியில் மாநில அரசுகள் கடன் பெறுவதற்கான கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளா்த்த வேண்டும். கரோனா பாதிப்பை சமாளிக்க ரூ.20 லட்சம் கோடியில் திட்டம் செயல்படுத்தப்படுவதாக பிரதமா் கூறுகிறாா். ஆனால், இந்தத் திட்டம் வங்கிகள் மூலம் கடன் கொடுப்பது தானே தவிர, புதிய திட்டம் அல்ல. ஏற்கெனவே மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் ரூ.30 லட்சம் கோடிக்கு வங்கிகள் மூலம் கடன் வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை உயா்த்திவிட்டு அரிசியை கொடுத்தால் மட்டும் போதாது. ஒவ்வோா் ஏழை குடும்பங்களுக்கும் மத்திய அரசு மாதந்தோறும் ரூ.5,000 வழங்க வேண்டும் என்றாா் முதல்வா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com