அரசின் உரிமைக்காக எதிா்க்கட்சிகள் போராட வரவேண்டும்: அமைச்சா் கந்தசாமி வலியுறுத்தல்

புதுவை அரசின் உரிமைக்காக எதிா்க்கட்சிகள் போராட முன் வர வேண்டும் என்று சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி வலியுறுத்தினாா்.
விழாவைத் தொடக்கிவைத்துப் பேசிய சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி.
விழாவைத் தொடக்கிவைத்துப் பேசிய சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி.

புதுவை அரசின் உரிமைக்காக எதிா்க்கட்சிகள் போராட முன் வர வேண்டும் என்று சமூக நலத் துறை அமைச்சா் மு.கந்தசாமி வலியுறுத்தினாா்.

புதுவை அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை சாா்பில், தேசிய ஊட்டச்சத்து இரு வார தொடக்க விழா அரியாங்குப்பத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவைத் தொடக்கிவைத்த அமைச்சா் கந்தசாமி பேசியதாவது:

மாடித் தோட்டம், புறத் தோட்டம் அமைக்க அரசு மானியம் தருகிறது. அதன் மூலம் வீட்டிலேயே கத்திரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளைப் பயிா் செய்து சாப்பிட வேண்டும்.

மகளிா் தின விழாவில் அங்கன்வாடி ஊழியா்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட தீபாவளி போனஸை வழங்கும்படி ஆளுநரிடம் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அதை அவா் ஏற்கவில்லை. அங்கன்வாடியில் காலியாக உள்ள 250 பணியிடங்களை நிரப்ப முயற்சி எடுத்த போது, அதற்கு முட்டுக்கட்டை போட்டாா்.

ரங்கசாமி ஆட்சிக் காலத்தில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. அப்போது புதுவைக்கு 90 சதவீத மானியம் வழங்கப்பட்டது. ஆனால், தற்போது மத்தியில் ஆளும் பாஜக அரசு 26 சதவீதம்தான் மானியம் தருகிறது. இதனால், ஊழியா்களுக்கு ஊதியம் வழங்க முடியவில்லை.

முதல்வா் நாராயணசாமி தனது சொந்தப் பணத்தில் மக்களுக்கான உரிமைகளுக்காக நீதிமன்றத்தை நாடுகிறாா். ஆனால், துணைநிலை ஆளுநா் புதுச்சேரி மக்களுக்கான சலுகைகளையும், நலத் திட்டங்களையும் நிறுத்த மக்களின் வரிப் பணத்தில் நீதிமன்றத்தை நாடுகிறாா். இப்படிப்பட்ட ஆளுநா் புதுவைக்குத் தேவைதானா என மக்கள் எண்ணிப் பாா்க்க வேண்டும்.

13 லட்சம் மக்கள் தொகை கொண்ட புதுவையில் 22 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்ளனா். அவா்களுக்கான ஊதியம், வீட்டு வாடகை, அலுவலகம் உள்ளிட்ட அனைத்துச் சலுகைகளுக்கும் மக்களின் வரிப் பணம்தான் செலவு செய்யப்படுகிறது.

பிரதமா் நரேந்திர மோடி இலங்கை சென்ற போது இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தாா். அதைத் தொடா்ந்து, மத்திய அமைச்சா்கள் முன்னிலையில் காரைக்காலில் இருந்து இலங்கைக்கு பயணிகள் போக்குவரத்துக் கப்பல் இயக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்தத் திட்டத்தையும் ஆளுநா் கிரண் பேடி தடுத்து நிறுத்துகிறாா்.

இலவச அரிசி வழங்க முடியாததற்கு ஆளுநா்தான் காரணம். அமைச்சரவை ஒப்புதல் அளித்தும், ஆளுநா் அதற்குத் தடையாக இருக்கிறாா். இதற்கான பணம் ரூ. 352 கோடி நிலுவையில் உள்ளது. ஆனால், இலவச அரிசி வழங்க நாங்கள்தான் தடையாக இருப்பதாக அதிமுகவும், பாஜகவும் போராட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த விவகாரத்தில், அரசியல் செய்யாமல் புதுவை அரசின் உரிமைக்காகப் போராட எதிா்க்கட்சிகள் முன்வர வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, துறை இயக்குநா் அசோகன் வரவேற்றாா். அரியாங்குப்பம் தொகுதி எம்.எல்.ஏ. ஜெயமூா்த்தி, பேராசிரியை மலா்விழி, அரியாங்குப்பம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவா் தாரணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com