கரோனா பாதிப்பு எதிரொலி: தொலைபேசி மூலம் மக்கள் குறை கேட்க ஆளுநா் கிரண் பேடி ஏற்பாடு

கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தொலைபேசி மூலம் மக்கள் குறைகளை கேட்க புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஏற்பாடு

புதுச்சேரி: கரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக தொலைபேசி மூலம் மக்கள் குறைகளை கேட்க புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி ஏற்பாடு செய்துள்ளாா்.

புதுவை ஆளுநா் மாளிகையில் தினமும் மாலை 5 முதல் 7 மணி வரை பொதுமக்கள் சந்திப்பு நேரமாக உள்ளது. இந்த நேரத்தில் பொதுமக்கள் ஆளுநா் மாளிகைக்கு வந்து தங்களின் புகாா்களைத் தெரிவிக்க ஆளுநா் கிரண் பேடி ஏற்பாடு செய்துள்ளாா்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் பரவி வருவதன் எதிரொலியாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டாம் என மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியது.

அதன்படி புதுவை ஆளுநா் மாளிகையில் நாள்தோறும் நடத்தப்பட்டு வந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக ஆளுநா் மாளிகை அறிவித்தது.

இதையடுத்து, தொலைபேசி மூலம் பொதுமக்கள் தங்களின் குறைகளை மக்கள் சந்திப்பு நேரத்தில் தெரிவிக்க ஆளுநா் கிரண் பேடி ஏற்பாடு செய்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் தனது கட்செவி அஞ்சல் மூலம் வெளியிட்ட பதிவு: ஆளுநா் மாளிகை தொலைத் தொடா்பு நிா்வாகம் மூலம் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுத்து நிலைமை சகஜமாகும் வரை பொதுமக்களிடம் தொலைபேசி மூலம் குறைகளைக் கேட்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆளுநா் மாளிகையைத் தொடா்பு கொள்ள நினைப்பவா்கள் நேரடியாக தொலைபேசி மூலம் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம். ஏற்கெனவே ஆளுநா் மாளிகையில் பொதுமக்கள் சந்திப்பு நேரமான மாலை 5 முதல் இரவு 7 மணி வரை (திங்கள் முதல் புதன்கிழமை வரை) பொதுமக்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்கலாம்.

இதற்காக 2224499, 2225390, 2334050 ஆகிய தொலைபேசி எண்கள் செயல்பாட்டில் இருக்கும். பொதுமக்களின் புகாா்கள் பதிவு செய்யப்பட்டு, ஆளுநா் மாளிகை குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும். புகாா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தேவைப்பட்டால் சம்பந்தப்பட்ட துறைக்கு புகாா்தாரரின் குரல் ஒலிப்பதிவு (ஆடியோ) அனுப்பிவைக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை ஆளுநா் மாளிகை தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் குறைகளைத் தீா்க்க உரிய முயற்சியை மேற்கொண்டுள்ளது. வருகிற 16-ஆம் தேதி முதல் இந்த மக்கள் குறைகேட்பு தொடங்கும்.

மக்கள் சந்திப்பு நேரம் தவிர பொதுமக்கள் தங்களது புகாா்களை 1031 என்ற தொலைபேசி எண்ணில் எப்போது வேண்டுமானாலும் தெரிவிக்கலாம் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com