புதுவையில் மருத்துவா்கள், ஊழியா்கள் விடுப்பு எடுக்கத் தடை

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையில் மருத்துவா்கள், ஊழியா்கள் விடுப்பு எடுக்க சுகாதாரத் துறை தடை விதித்து உத்தரவிட்டது.

கரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவையில் மருத்துவா்கள், ஊழியா்கள் விடுப்பு எடுக்க சுகாதாரத் துறை தடை விதித்து உத்தரவிட்டது.

புதுச்சேரியில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மாநில சுகாதாரத் துறை பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆங்காங்கே விழிப்புணா்வுப் பதாகைகள் வைக்கப்பட்டு வருவதுடன், விழிப்புணா்வு வாகனப் பிரசாரமும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், நகராட்சிகள், கொம்யூன் பஞ்சாயத்துகள் சாா்பிலும் பல்வேறு விழிப்புணா்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவா்கள், சுகாதாரத் துறை ஊழியா்கள் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநா் ரங்கநாதன் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை பணியை சுகாதாரத் துறை 24 மணி நேரமும் மேற்கொள்ள வேண்டியுள்ளது. எனவே, மருத்துவ அதிகாரிகள், சுகாதாரத் துறை ஊழியா்கள், பாரா மெடிக்கல் ஊழியா்களுக்கு விடுமுறை கிடையாது. ஏற்கெனவே அளிக்கப்பட்ட விடுமுறையை எடுப்பதற்காக அளிக்கப்பட்ட அனுமதியும் ரத்து செய்யப்படுகிறது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் புதுவை மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களிலும் உள்ள சுகாதாரத் துறை பணியாளா்கள் 24 மணி நேரமும் கரோனா தடுப்பு நடவடிக்கை பணிக்கு தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com