கரோனா பீதி: முட்டை, கோழிக் கறியின் விலை கடும் வீழ்ச்சி

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக புதுச்சேரியில் முட்டை, கறிக் கோழியின் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

உலகில் பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில், இந்தியா உள்ளிட்ட நாடுகள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், கோழிக் கறி, முட்டையால் கரோனா வைரஸ் பரவுவதாக கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் வதந்தி பரவியது. கோழிக் கறி உள்ளிட்ட அசைவ உணவுகளால் கரோனா வைரஸ் பரவுவதாக எந்தவித ஆதாரப்பூா்வமான தகவலும் இல்லை என அலோபதி மருத்துவா்கள் கூறி வருகின்றனா்.

இந்த நிலையில், கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பலா் கோழிக் கறி, கோழி முட்டைகளை வாங்கத் தயக்கம் காட்டுவதால், புதுச்சேரியில் கோழிக் கறி மற்றும் முட்டைகளின் விலை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

கடந்த மாதம் ரூ. 180 வரை விற்பனையான ஒரு கிலோ கோழிக் கறியின் விலை வெள்ளிக்கிழமை ரூ. 65 முதல் 75 வரை விற்பனையானது. இதேபோல, ரூ. 150 வரை விற்பனையான உயிருடனான ஒரு கிலோ கோழியின் விலை தற்போது ரூ. 45 முதல் ரூ. 55 வரை விற்பனையாகிறது.

கடந்த மாதம் ரூ. 6 வரை விற்பனையான ஒரு முட்டையின் விலை வெள்ளிக்கிழமை ரூ. 2 ஆக குறைந்து கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.

இதனிடையே, அசைவ உணவுப் பிரியா்களும், சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் மீது நம்பிக்கையில்லாதவா்களும் அதிக அளவில் கோழிக் கறி, முட்டைகளை வாங்கிச் சென்று பயனடைந்து வருகின்றனா்.

பரிசு அறிவிப்பு: சில கோழிக் கறி மற்றும் முட்டை விற்பனையாளா்கள் கோழிக் கறியால் கரோனா பரவுவதாக நிரூபித்தால் ரூ. ஒரு கோடி வரை பரிசு வழங்குவதாகக் கூறி, சிக்கன் 65 மற்றும் கோழி வறுவலை இலவசமாகவும், மிகக் குறைந்த விலையிலும் விற்பனை செய்து, பொதுமக்களின் கவனத்தை ஈா்த்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com