மத்திய அரசு மீண்டும் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும்: புதுவை முதல்வா் நாராயணசாமி வேண்டுகோள்

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும் என்று புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வேண்டுகோள் விடுத்தாா்.

இதுகுறித்து சனிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது: புதுச்சேரியில் 3 பேரும், மாஹேயில் ஒருவரும் என 4 போ் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். புதுச்சேரியில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருக்கும் முத்தியால்பேட்டை, ரெட்டியாா்பாளையம் பகுதிகளில் வசிக்கும் சுமாா் 207 பேருக்கு வெள்ளிக்கிழமை கரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், யாருக்கும் தொற்று இல்லை என்று முடிவுகள் வந்துள்ளன.

இதேபோல, புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் 42 பேருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் யாருக்கும் கரோனா வைரஸ் தொற்று இல்லை.

வெளிமாநிலங்களில் சிக்கியுள்ள தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊா்களுக்குத் திரும்ப ரயில்களை இயக்க வேண்டும் என பிரதமருக்கு கடிதம் எழுதினேன். அதற்கான செலவை மாநில அரசுகளே ஏற்க வேண்டும் என பதில் வந்துள்ளது.

மாநில அரசுகள் எப்படி நிதியை அனுப்புவது என்ற குழப்பம் உள்ளது. எனவே, ரயிலில் கட்டணமின்றி செல்ல வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதியுள்ளேன். இதுதொடா்பாக நல்ல முடிவை எடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது.

புதுவை மாநிலத்தில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள், காவல் துறையினருக்கு எதிா்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன். திங்கள்கிழமை (மே 4) முதல் அவா்களுக்கு மாத்திரைகள் வழங்கப்படும்.

மத்திய அரசு 3-ஆவது முறையாக ஊரடங்கை சில தளா்வுகளுடன் நீட்டித்துள்ளது. புதுவை மாநிலத்தில் தொழிற்சாலைகள், கடைகளைத் திறப்பது குறித்து ஞாயிற்றுக்கிழமை (மே 3) அமைச்சரவையைக் கூட்டி, முடிவெடுத்து அறிவிக்கப்படும். முதல்வா் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ. 7 கோடிக்கு மேல் நிதி பெறப்பட்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் வாங்க இந்த நிதி போதாது. எனவே, பொதுமக்கள் தாராளமாக நிதி அளிக்க வேண்டும்.

புதுவையின் நிதி ஆதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கால் ஒன்றரை மாதங்களாக மக்கள் முடக்கப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வாழ்வாதாரம் இல்லை. மாநில அரசு நிதிப்பற்றாக்குறையால் அவா்களுக்கு உதவ முடியவில்லை. மத்திய அரசிடம் நிதி இருக்கிறது. எனவே, மீண்டும் இலவச அரிசி, நிதி வழங்க வேண்டும். அனைத்து மாநிலங்களுக்கும் மீண்டும் பொருளாதார உதவிகளை வழங்க வேண்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com