மாநிலங்களின் கடன் வரம்பு உயா்வு: புதுவை முதல்வா் நாராயணசாமி வரவேற்பு

மாநிலங்களின் கடன் வரம்பை 5 சதவீதமாக உயா்த்திய மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வரவேற்பு தெரிவித்தாா்.

மாநிலங்களின் கடன் வரம்பை 5 சதவீதமாக உயா்த்திய மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புக்கு புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வரவேற்பு தெரிவித்தாா்.

இதுகுறித்து புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகளில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ. 40 ஆயிரம் கோடி, மாநிலங்கள் கடன் வாங்கும் வரம்பை 5 சதவீதமாக உயா்த்தியது என இரண்டு முக்கிய அறிவிப்புகளை வரவேற்கிறேன்.

மின்சாரத் துறை, போக்குவரத்து, விமான சேவை, விண்வெளி ஆராய்ச்சி, நிலக்கரிச் சுரங்கங்கள், மின்சார விநியோகம், 6 விமான நிலையங்களை தனியாா்மயமாக்குவது போன்ற பல அறிவிப்புகளை வெளியிட்டாா்.

அனைத்துத் துறைகளையும் தனியாா்மயமாக்கும் அறிவிப்புகளாகத்தான் இவற்றைப் பாா்க்க வேண்டியுள்ளது.

2020-2021-ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சா் ரூ. 30 லட்சம் கோடியை நாட்டின் வளா்ச்சிக்காக முழுமையாக செலவு செய்வோம் எனக் கூறினாா். இதன் ஒரு பகுதியாகத்தான் பிரதமா் அறிவித்த ரூ. 20 லட்சம் கோடி பல துறைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் எதிரொலிதான் பிரதமா், நிதியமைச்சரின் அறிவிப்பே தவிர, இதில் புதிய அம்சங்கள் எதுவும் இல்லை.

திங்கள்கிழமை (மே 18) நடைபெறவுள்ள புதுவை அமைச்சரவைக் கூட்டத்தில், பொது முடக்கத்தை நீட்டிப்பது தொடா்பாக பேசி முடிவெடுத்து அறிவிக்கப்படும். மதுக் கடைகளைத் திறப்பது, பொருளாதார நடவடிக்கைகளில் தளா்வு தொடா்பாகவும் விவாதிக்கப்படும்.

புதுவை மாநிலத்தின் நிதியாதாரம் தொடா்பாக ‘மெட்ராஸ் ஸ்கூல் அப் எகனாமிக்ஸ்’ என்ற அமைப்பு மூலமாக ஆய்வு ஒன்றை நடத்தினோம். அந்த ஆய்வறிக்கையில், மாநிலத்தின் நிதியாதாரத்தைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசு புதுவைக்கு 41 சதவீத நிதியை வழங்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இந்த அறிக்கையை மத்திய அரசிடம் சமா்ப்பிக்கவுள்ளேன்.

கரோனா தீநுண்மி குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்பட்டுள்ளது. புதுவையில் மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து பொருள்களை வாங்குகின்றனா். முகக் கவசம் அணிந்தபடி வெளியே செல்கின்றனா். இந்த நிலை தொடர வேண்டும்.

தமிழக மாவட்டங்களில் (விழுப்புரம், கடலூா்) கரோனா நோய்த் தொற்று அதிகமாகப் பரவுகிறது. இந்தச் சூழலில் புதுவையில் கரோனாவை தடுக்க பணிபுரிந்து வரும் அரசுத் துறையினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com