உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மதித்து தமிழக அரசுகாரைக்காலுக்கு ஒரு டிஎம்சி நீரை வழங்க வேண்டும்

உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மதித்து தமிழக அரசு, காரைக்காலுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டுமென புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

உச்ச நீதிமன்றத் தீா்ப்பை மதித்து தமிழக அரசு, காரைக்காலுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டுமென புதுவை முதல்வா் வே.நாராயணசாமி வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

கரோனா தொற்று பரவலாகும்; தணியாது என்றும், இன்னும் ஒரு மாதத்துக்குள் இந்தத் தொற்று அதிகரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. எனவே, புதுவை மக்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், தேவையின்றி வெளியில் செல்லக் கூடாது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளில், பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ள புலம்பெயா்ந்த தொழிலாளா்கள், விவசாயிகள், கட்டுமானத் தொழிலாளா்கள், அமைப்புசாராத் தொழிலாளா்கள் பயன்பெறும் வகையில் முழுமையான திட்டங்கள் எதுவும் இல்லை.

பொது முடக்கத்தால் புதுவை அரசுக்கு வருவாய் இல்லை. தற்போது பொது முடக்கத்தை தளா்த்தியுள்ள நிலையிலும்கூட இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. எனவே, மத்திய அரசானது, மாநிலங்களுக்கு தாராளமாக நிதியுதவி அளிக்க வேண்டுமென பிரதமருடன் காணொலியில் உரையாடுகையில் வலியுறுத்தினேன்.

புதுவைக்கு ஜிஎஸ்டிக்கான இழப்பீடு, பாதிக்கப்பட்ட நிதி ஆதாரத்துக்கான இழப்பீடுகளை வழங்க வேண்டுமென ஏற்கெனவே பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுவரை அதற்குப் பதில் வரவில்லை. மேலும், கரோனா சம்பந்தமான கட்டமைப்பை உருவாக்க மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். இடைக்காலமாக ரூ.200 கோடி என மொத்தமாக ரூ.995 கோடி வழங்க வேண்டுமெனவும் கடிதம் எழுதி இருந்தேன். அதற்கும் பதில் வரவில்லை.

பொது முடக்கத்தால் அனைத்து மாநிலங்களும் நிதிப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, மத்திய அரசு உடனடியாக மாநிலங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

மேட்டூா் அணையை வருகிற ஜூன் 12-ஆம் தேதி திறக்கவுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. உச்ச நீதிமன்றத் தீா்ப்பின் அடிப்படையில், குறுவை நெல் சாகுபடிக்கு புதுவை மாநிலத்துக்குள்பட்ட காரைக்காலுக்கு ஒரு டிஎம்சி தண்ணீரை வழங்க வேண்டும். இந்த உத்தரவை தமிழக அரசு மதித்து செயல்பட வேண்டும்.

இது தொடா்பாக மாநில வேளாண் துறை அமைச்சா் கமலக்கண்ணன் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இதில், பொதுப் பணித் துறை, விவசாயத் துறை அதிகாரிகள் இணைந்து செயல்பட்டு, தமிழக அரசுடன் பேசி, காரைக்காலுக்கு தண்ணீா் கிடைக்க ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் வே.நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com