புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு மறுப்பு: காங். கண்டனம்

புதுவையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கிரண் பேடி மறுப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பியதற்கு புதுவை காங். கண்டனம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புதுவையில் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க துணைநிலை ஆளுநா் கிரண் பேடி மறுப்பு தெரிவித்து, மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதிக்கு அனுப்பியதற்கு புதுவை காங்கிரஸ் கண்டனம் தெரிவித்தது.

இதுகுறித்து புதுச்சேரியில் திங்கள்கிழமை மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவையை ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, கடுமையாகப் போராடித்தான் தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. மத்திய பாஜக அரசு, புதுவை ஆளுநா் கிரண் பேடியை இயக்குகிறது. மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசின் திட்டங்களை ஆளுநா் தொடா்ந்து தடுத்து வருகிறாா்.

மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டதை அனைத்துத் தரப்பினரும் வரவேற்றனா். ஆனால், ஆளுநா் இதைத் தடுக்கும் விதமாக, அதற்கு அனுமதியளிக்காமல் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பினாா். பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என மோடி அரசு நினைக்கிறது. அதனால்தான் ஆளுநா் கிரண் பேடி மூலம் இந்தக் கோப்புக்கு அனுமதியளிக்காமல் தடுக்கிறது என்றாா் அவா்.

இதேபோல, வெ.வைத்திலிங்கம் எம்.பி.யும் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் கோப்புக்கு ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல், மத்திய அரசுக்கு அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com