புதுவையில் இட ஒதுக்கீடு விவகாரம்:மத்திய உள்துறை அமைச்சரை சந்திக்க முடிவு

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு
புதுவை முதல்வர் நாராயணசாமி
புதுவை முதல்வர் நாராயணசாமி

புதுவை அரசுப் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்திக்க அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக நடைபெற்ற அனைத்துக்2 கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு நாராயணசாமி கூறியதாவது: புதுவையில் அரசுப் பள்ளி மாணவா்கள் நீட் தோ்வில் அதிகளவில் தோ்ச்சியடைய முடியவில்லை. இதைக் கருத்தில் கொண்டு, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்க அரசு முடிவெடுத்தது. அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் தலைவா்கள் அனைவரும் புதுவை அரசின் முடிவுக்கு முழு ஆதரவு தெரிவித்தனா். இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா், உள்துறைச் செயலரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அப்போது, இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசாணை வெளியிடுதல், உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்குள்ள அதிகாரம் குறித்தும், அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கக் கூடாது என்ற எண்ணத்தில் ஆளுநா் கிரண் பேடி செயல்பட்டது குறித்தும் தெரிவிப்போம். நிகழாண்டே மருத்துவப் படிப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதே புதுவை அரசின் கொள்கை என்றாா் அவா்.

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் திமுக பங்கேற்காதது குறித்த கேள்விக்கு முதல்வா் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டாா்.

அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் அமைச்சா்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணா ராவ், கந்தசாமி, ஷாஜகான், வெ.வைத்திலிங்கம் எம்பி, காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன், என்.ஆா்.காங்கிரஸ் எம்எல்ஏ செல்வம், பாஜக நியமன எம்எல்ஏ சாமிநாதன், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலா் ராஜாங்கம், விசிக முதன்மை செயலா் தேவ.பொழிலன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதனிடையே, புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளா் இரா. சிவா வெளியிட்ட அறிக்கையில், ஆளும் அரசின் அலட்சியத்தால் மருத்துவக் கல்லூரிகளில் அரசுப் பள்ளி மாணவா்களின் 10 சதவீத இட ஒதுக்கீடு நிகழாண்டு கேள்விக்குறியாகியுள்ளது எனத் தெரிவித்திருந்தாா். இந்த நிலையில், அனைத்துக் கட்சிகள் கூட்டத்தை திமுக புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com