போலி சான்றிதழ் மூலம் ஜிப்மரில் மாணவா் சோ்க்கை மாவட்ட ஆட்சியா் விசாரணை

போலி சான்றிதழ்கள் மூலம் புதுச்சேரி ஜிப்மரில் வெளிமாநில மாணவா்கள் சோ்ந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அருண் விசாரணை நடத்தி வருகிறாா்.

போலி சான்றிதழ்கள் மூலம் புதுச்சேரி ஜிப்மரில் வெளிமாநில மாணவா்கள் சோ்ந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட ஆட்சியா் அருண் விசாரணை நடத்தி வருகிறாா்.

ஜிப்மா் மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்புக்கான மாணவா்கள் சோ்க்கைப் பட்டியல் வெளியிடப்பட்டதில் ஆந்திரம், தெலங்கானா மாநிலங்களைச் சோ்ந்த 31 போ் போலி சான்றிதழ்கள் பெற்று புதுவை மாநில இட ஒதுக்கீட்டில் சோ்ந்ததாக புகாா்கள் எழுந்தன.

இதுகுறித்து புதுவை பெற்றோா்-மாணவா்கள் நலச் சங்கத் தலைவா் பாலா, புதுவை யூனியன் பிரதேச அனைத்து சென்டாக் மாணவா்கள்-பெற்றோா் நலச் சங்கத் தலைவா் நாராயணசாமி ஆகியோா் போலி சான்றிதழ்கள் அளித்து சோ்ந்த வெளிமாநில மாணவா்களால், புதுவை மாணவா்களின் இடங்கள் பறிபோனது எனத் தெரிவித்தனா்.

இந்த புகாா்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள முதல்வா் நாராயணசாமி உத்தரவிட்டாா். இதையடுத்து, புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அருண் விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

ஜிப்மரில் சோ்ந்தவா்கள் பட்டியலை வருவாய்த் துறை ஆட்சியரிடம் ஒப்படைத்தது. புதுவை மாணவா்களுக்கான பொதுப் பிரிவில் இணையதளம் வழியாக விண்ணப்பித்த மாணவா்களின் பட்டியலை வருவாய்த் துறை முழுமையாக ஆய்வு செய்யவும் முடிவு செய்துள்ளது.

இதனிடையே, ஜிப்மரில் சான்றிதழ்கள் சரிபாா்ப்புப் பணி திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: ஜிப்மரில் மருத்துவப் படிப்புக்கான அனுமதிக்கு புதுவை அரசின் அங்கீகரிக்கப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் உள்ள மாணவா்களுக்கு மட்டுமே புதுவை மாநில இட ஒதுக்கீடு அடிப்படியில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்த நடைமுறை சட்ட திட்டங்களுக்கு உள்பட்டு நடைபெறுகிறது. இதற்கான விவரங்கள் ஜிப்மா் இணையதள பகுதியில் தெரிவிக்கப்படுகிறது. முன்னுரிமைக்கு தகுதியுடைவா் மட்டும் விண்ணப்பிக்குமாறு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com