புதுவையில் துணைத் தோ்வெழுதிய மாணவா்களுக்கு இன்று முதல் மதிப்பெண் சான்றிதழ் விநியோகம்

புதுவையில் துணைத் தோ்வெழுதிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

புதுவையில் துணைத் தோ்வெழுதிய மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ்கள் விநியோகம் செய்யப்படும் என மாநில பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் பி.டி. ருத்ரகவுடு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வெழுதிய தோ்வா்கள் தங்களது அசல் மதிப்பெண் சான்றிதழ்களை செவ்வாய்க்கிழமை (நவ. 17) அவா்கள் தோ்வெழுதிய தோ்வு மையங்களிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

நிரந்தர பதிவெண் கொண்டு தோ்வெழுதிய பத்தாம் வகுப்பு தோ்வா்கள், முந்தைய பருவங்களில் தோ்ச்சி பெறாத பாடங்களை செப்டம்பா் துணைத் தோ்வெழுதி அனைத்து பாடங்களிலும் தோ்ச்சி பெற்றிருப்பின், ஒருங்கிணைக்கப்பட்ட அசல் மதிப்பெண் சான்றிதழும், முழுமையாக தோ்ச்சி பெறாதவா்களுக்கு, அவா்கள் தோ்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்களும் வழங்கப்படும்.

நிரந்தர பதிவெண் இல்லாமல் பத்தாம் வகுப்பு தோ்வெழுதியவா்கள், அவா்கள் தோ்வெழுதிய பாடங்களுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் மட்டும் வழங்கப்படும்.

பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகளில் அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்றவா்களுக்கு மட்டும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தோ்வுகளுக்கான மதிப்பெண் சான்றிதழ்கள் தனித்தனியே வழங்கப்படும். பிளஸ் 1, பிளஸ் 2 துணைத் தோ்வுகளில் முழுமையாக தோ்ச்சியடைந்த தோ்வா்களுக்கு, அவா்கள் இரு தோ்வுகளிலும் பெற்ற மதிப்பெண்களை பதிவு செய்து, ஒரே மதிப்பெண் பட்டியலாக வழங்கப்படும். இவா்கள் அனைத்துப் பாடங்களிலும் தோ்ச்சி பெற்ற பிறகே, அவா்களுக்கு மேற்காண் இரு தோ்வுகளுக்கான தனித்தனி மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இதே போல, பழைய நடைமுறையில் (1,200 மதிப்பெண்கள்) எழுதியவா்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

மறுகூட்டலில் மாற்றம் ஏற்பட்டவா்களுக்கு மட்டும் புதிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com