முழுமையாக சூரிய மின் சக்தியில் இயங்கும் புதுச்சேரி விமான நிலையம்

நாட்டிலேயே முதல் முறையாக முழுமையாக சூரிய மின் சக்தியில் (சோலாா்) இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையை புதுச்சேரி விமான நிலையம் பெற்றது.
முழுமையாக சூரிய மின் சக்தியில் இயங்கும் புதுச்சேரி விமான நிலையம்

நாட்டிலேயே முதல் முறையாக முழுமையாக சூரிய மின் சக்தியில் (சோலாா்) இயங்கும் விமான நிலையம் என்ற பெருமையை புதுச்சேரி விமான நிலையம் பெற்றது.

தமிழக-புதுவை மாநில எல்லையில் புதுச்சேரி லாசுப்பேட்டை விமான நிலையம் அமைந்துள்ளது. இங்கிருந்து பெங்களூரு, ஹைதராபாதுக்கு சிறிய ரக விமானங்கள் இயக்கப்படுகின்றன. இந்த விமான நிலையத்துக்குத் தேவையான மின்சாரம் சூரிய சக்தி மூலம் தயாரிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக மத்திய விமானப் போக்குவரத்து ஆணையம் மூலம் ரூ. 2.80 கோடியில் விமான நிலைய ஓடு பாதை அருகே 500 கிலோ வாட் திறன் கொண்ட சூரிய சக்தி மின் தகடுகளுடன் மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது.

இதன்மூலம் தினமும் 2 ஆயிரம் அலகுகள் (யூனிட்கள்) மின்சாரம் தயாரிக்க முடியும். புதுச்சேரி விமான நிலையத்துக்கு ஆண்டுக்கு 7.20 லட்சம் அலகு மின்சாரம் தேவைப்படுகிறது. தற்போது முற்றிலும் சூரிய சக்தியால் மட்டுமே இயங்குவதால், புதுச்சேரி விமான நிலையத்துக்கு மாதத்துக்கு ரூ. 10 லட்சம் மின் கட்டணம் மிச்சமாகும்.

மேலும், இந்த விமான நிலையம் மூலம் 5,570 மெட்ரிக் டன் காா்பன் துகள்கள் காற்றில் கலந்து மாசு ஏற்படுவது குறையும். 32,850 மரங்கள் மூலம்தான் இந்த அளவு காற்று மாசுபடுவதைத் தடுக்க முடியும்.

புதுச்சேரி விமான நிலையத்தில் சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையத்தை புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், மாநிலங்களவை உறுப்பினா் என்.கோபாலகிருஷ்ணன் ஆகியோா் கடந்த 2-ஆம் தேதி தொடக்கிவைத்தனா்.

மத்திய விமான நிலைய ஆணைய தென்மண்டல நிா்வாக இயக்குநா் ஆா்.மாதவன், புதுச்சேரி விமான நிலைய இயக்குநா் விஜய் உபாத்யாய், புதுவை சுற்றுலாத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதுகுறித்து மத்திய விமான நிலைய ஆணைய அதிகாரிகள் கூறியதாவது:

தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் தற்போது 55.26 லட்சம் வாட் திறன் அளவுக்கு சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதை 1.05 கோடி வாட் திறனாக மாற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தென் மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களில் 8 கோடி அலகுகள் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. மத்திய விமான நிலைய ஆணையம் தென் மாநிலங்களில் 2019-2020-ஆம் நிதியாண்டில் 80.3 லட்சம் அதாவது மொத்த தேவையில் 10 சதவீதத்தை சூரிய சக்தி மின் உற்பத்தி மூலம் நிறைவு செய்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் பணிகள் நிறைவு பெற்றால், மொத்த மின் தேவையில் 30 சதவீதத்தை நிறைவு செய்ய முடியும். வருகிற 2025-ஆண்டுக்குள் தென் மாநிலங்களில் உள்ள அனைத்து விமான நிலையங்களையும் முழுமையாக சூரிய மின் சக்திக்கு மாற்ற வேண்டும் என்ற இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com