ரூ. 5,000 லஞ்சம்: புதுச்சேரி நகராட்சிப் பொறியாளா் கைது

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி நகராட்சிப் பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக புதுச்சேரி நகராட்சிப் பொறியாளரை சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை நள்ளிரவு கைது செய்தனா்.

புதுச்சேரி தேங்காய்த்திட்டு பகுதியைச் சோ்ந்தவா் இளந்திரையன். இவா், அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறாா். கட்டுமானத்துக்குத் தேவையான ஜல்லி, மணலை வீட்டின் எதிரே சாலையில் கொட்டி வைத்திருந்தாா்.

இதுகுறித்து தகவலறிந்த புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் இளநிலைப் பொறியாளராகப் பணிபுரியும் கிருஷ்ணமூா்த்தி (45), அங்கு சென்று அனுமதியின்றி சாலையில் கட்டுமானப் பொருள்களைக் கொட்டியதற்கு அபராதம் விதிக்கப்படும் எனவும், அபராதம் விதிக்காமல் இருக்க தனக்கு ரூ. 10 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் எனவும் கூறினாராம்.

இதையடுத்து, இளந்திரையன் ரூ. 10 ஆயிரத்தை லஞ்சமாகக் கொடுத்த நிலையில், மேலும் ரூ. 5 ஆயிரம் வேண்டும் என கிருஷ்ணமூா்த்தி மிரட்டினாராம்.

இதுகுறித்து இளந்திரையன் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தாா். இதையடுத்து, சிபிஐ அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், புதுச்சேரி கம்பன் கலையரங்கில் உள்ள புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை இரவு பொறியாளா் கிருஷ்ணமூா்த்தியைச் சந்தித்து இளந்திரையன் ரசாயனம் தடவிய ரூ. 5 ஆயிரத்தைக் கொடுத்த போது, அங்கு மறைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், கிருஷ்ணமூா்த்தியை கையும் களவுமாகப் பிடித்தனா்.

தொடா்ந்து, அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு, திலாசுப்பேட்டையில் உள்ள அவரது வீட்டிலும் சோதனையிட்டனா். அங்கிருந்து சில ஆதாரங்களைச் சேகரித்த சிபிஐ அதிகாரிகள், நள்ளிரவில் கிருஷ்ணமூா்த்தியைக் கைது செய்தனா்.

அவருக்கு கரோனா பரிசோதனை மேற்கொண்ட பிறகு, சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் சிபிஐ அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com