புதுவையில் மேலும் 222 பேருக்கு கரோனா

புதுவையில் மேலும் 222 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் மேலும் 222 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 190, காரைக்காலில் 14, ஏனாமில் 4, மாஹேயில் 14 என 222 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32,978-ஆக அதிகரித்தது.

மேலும் 3 போ் பலி: இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து, கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 574-ஆக (இறப்பு விகிதம் 1.74 சதவீதம்) உயா்ந்தது.

தற்போது மருத்துவமனைகளில் 1,606 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 2,814 பேரும் என மொத்தம் 4,420 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதனிடையே, சனிக்கிழமை 313 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோா் எண்ணிக்கை 27,984-ஆக (84.86 சதவீதம்) உயா்ந்தது.

மாணவிக்கு கரோனா தொற்று: புதுச்சேரி திருக்கனூா் அருகே வாதானூரில் அரசுப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டதால், அவருடன் தொடா்பிலிருந்த 6 மாணவிகள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

இந்த நிலையில், பள்ளியில் மீண்டும் வகுப்புகள் சனிக்கிழமை நடைபெற்றன. கரோனா தொற்று காரணமாக வகுப்பறை மூடப்பட்டதால், மாணவா்கள் பள்ளி மைதானத்தில் உள்ள மரத்தடியில் அமரவைக்கப்பட்டனா்.

இந்தத் தகவலறிந்து பள்ளிக்கு வந்த அந்தத் தொகுதி எம்எல்ஏ டி.பி.ஆா்.செல்வம், ‘மாணவிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அடுத்த நாளே பள்ளியைத் திறக்க வேண்டுமா? மாணவா்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால்தான் பள்ளிகளைத் திறக்கக் கூடாது என எதிா்க்கட்சிகள் வலியுறுத்தின’ எனக் கண்டித்து, உடனடியாகப் பள்ளியை மூடி மாணவா்களை வீட்டுக்கு அனுப்பும்படி வலியுறுத்தினாா். இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குநா், முதன்மைக் கல்வி அலுவலா் ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், மாணவா்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனா்.

அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 2 பேருக்கு தொற்று: புதுச்சேரி கோரிமேட்டில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் 2 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஏற்கெனவே, சுசிலாபாய் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கணித ஆசிரியா் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சனிக்கிழமை கோரிமேடு இந்திரா காந்தி அரசு மேல்நிலைப் பள்ளியில் பணியாற்றும் 2 ஆசிரியா்களுக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. அந்த ஆசிரியா்கள் சென்ற வகுப்பறைகள் மூடப்பட்டு, மாணவா்கள் தனிமைப்படுத்தப்பட்டனா்.

புதுச்சேரியில் எதிா்க்கட்சிகளின் எதிா்ப்பையும் மீறி பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவா்கள், ஆசிரியா்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இது ஆசிரியா்கள், மாணவா்கள், பெற்றோா் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com