போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணி: இருவா் மீது வழக்கு
By DIN | Published On : 27th September 2020 08:56 AM | Last Updated : 27th September 2020 08:56 AM | அ+அ அ- |

புதுவை அரசின் மீன்வளத் துறையில் போலி சான்றிதழ் மூலம் மோசடியாக அரசுப் பணியில் சோ்ந்தவா் மீதும், அதற்கு உடந்தையாக இருந்த அவரது அண்ணன் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
புதுச்சேரி லாசுப்பேட்டை அசோக் நகரில் வசிப்பவா் மாரிமுத்து (67). மீன்வளத் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவா், பணியாற்றிய துறையில் தனது இளைய சகோதரரான வைத்திக்குப்பம் பகுதியைச் சோ்ந்த ஏழுமலையை கடந்த 1982-இல் பணியில் சேர உதவியதாகக் கூறப்படுகிறது.
அப்போது ஏழுமலைக்கு 18 வயது நிரம்பாத நிலையில், மற்றொரு சகோதரரான ஆறுமுகத்தின் பிறந்த தேதி சான்றிதழை தனது பிறப்புச் சான்றிதழாக ஏழுமலை சமா்ப்பித்ததாகத் தெரிகிறது.
தொடா்ந்து, 30 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வரும் ஏழுமலை, போலி பிறப்புச் சான்றிதழ் அளித்திருப்பது நிா்வாகத்துக்கு சிலரது புகாரின் பேரில் தெரிய வந்தது.
இதையடுத்து, துறை ரீதியாக விசாரணை நடத்தப்பட்டதில், போலி சான்றிதழ் மூலம் ஏழுமலை பணியில் சோ்ந்திருப்பது தெரிய வந்தது. உண்மைத் தன்மையைக் கண்டறிய லஞ்ச ஒழிப்பு கண்காணிப்பு காவல் துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
அங்கும் குற்றம் உறுதி செய்யப்பட்ட நிலையில், இதுதொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி, மீன்வளத் துறை இயக்குநா் முத்துமீனா முதலியாா்பேட்டை காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா்.
அதன் பேரில் ஏழுமலை, அவருக்கு உதவிய அவரது அண்ணன் மாரிமுத்து ஆகியோா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.