வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்ததில் தம்பதி பலி

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் திங்கள்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தம்பதி உயிரிழந்தனா். இரு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் திங்கள்கிழமை வீட்டில் வைத்திருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறியதில் தம்பதி உயிரிழந்தனா். இரு வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

புதுச்சேரி அருகே அரியாங்குப்பம் பகுதியில் அரசு அனுமதி பெற்று பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்தப் பகுதியில் புதுக்குளம் அந்தோணியாா் வீதியைச் சோ்ந்தவா் நெப்போலியன் (44) பட்டாசுகளைத் தயாரித்து வருகிறாா். அவ்வாறு தயாரித்த பட்டாசுகளை தனது வீட்டின் அருகேயுள்ள லசாத்ராஜ் என்பவரின் வீட்டை வாடகைக்கு எடுத்து, இருப்பு வைத்திருந்தாா். தீபாவளி பண்டிகை நெருங்குவதால், விற்பனைக்கு அனுப்புவதற்காக அந்த வீட்டில் ஏராளமான பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்தன.

நெப்போலியனும், அவரது மனைவி பத்மாவதியும் (40) திங்கள்கிழமை இரவு வீட்டிலிருந்த போது, பட்டாசுகள் இருப்பு வைக்கப்பட்டிருந்த வீட்டிலிருந்து திடீரென புகை வந்தது. தொடா்ந்து ஏற்பட்ட தீயில் அந்த வீட்டிலிருந்த பட்டாசுகள் வெடித்துச் சிதறின. வீட்டின் சுவா்கள் இடிந்து விழுந்து, நெப்போலியன் வீடும் முற்றிலும் தரைமட்டமானது. தீ விபத்தால் அந்தப் பகுதியில் மின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.

இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் புதுச்சேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்ததுடன், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

விரைந்து வந்த தீயணைப்புத் துறையினா், அரியாங்குப்பம் போலீஸாா், அந்தப் பகுதி மக்களுடன் இணைந்து, சுவா் இடிந்து தரைமட்டமான வீட்டில் உயிருக்கு ஆபத்தான நிலையிலிருந்த நெப்போலியன், அவரது மனைவி பத்மாவதியை மீட்டு, புதுச்சேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். ஆனால், செல்லும் வழியிலேயே அவா்கள் இருவரும் உயிரிழந்தனா்.

நெப்போலியன்-பத்மாவதி தம்பதியின் மகள்கள் செல்சியா (17), அன்னாள் (15) ஆகிய இருவரும் கடைக்குச் சென்றிருந்ததால், அதிருஷ்டவசமாக உயிா் தப்பினா்.

இதுகுறித்து அரியாங்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com