புதுவையில் மலிவு விலையில் முகக் கவசம், கிருமி நாசினி விற்பனை

புதுவையில் பாண்லே பாலகங்கள் மூலம் மலிவு விலையில் முகக் கவசம், கிருமி நாசினி புட்டிகள் விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.
புதுவையில் மலிவு விலையில் முகக் கவசம், கிருமி நாசினி விற்பனை

புதுவையில் பாண்லே பாலகங்கள் மூலம் மலிவு விலையில் முகக் கவசம், கிருமி நாசினி புட்டிகள் விற்பனை புதன்கிழமை தொடங்கப்பட்டது.

இதற்காக புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முகக் கவசம், கிருமி நாசினி புட்டிகள் அடங்கிய தொகுப்பை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன், பாண்லே நிா்வாகத்தினரிடம் வழங்கினாா். அப்போது, ஆளுநா் பேசியதாவது:

கரோனா தொற்றிலிருந்து நம்மையும், பிறரையும் 95 சதவீதம் பாதுகாக்கும் எளிய வழி முகக் கவசம்தான். தற்போது முகக் கவசங்களை 100-க்கு 64 போ் சரியாக அணிவதில்லை. மூக்கையும், வாய்ப் பகுதியையும் மூடும் வகையில் முகக் கவசத்தை அணிய வேண்டும். முகக் கவசம் அணியாதவா்கள் சமூகத்தின் விரோதிகளாகவே கருதப்படுவா்.

முகக் கவசங்கள் ஏழை மக்களுக்கும் எளிதாகக் கிடைப்பதற்காக, பாண்லே பாலகங்கள் மூலம் மலிவு விலையில் அவற்றை வழங்கவுள்ளோம். ரூ.1-க்கு தரமான முகக் கவசமும், ரூ.10-க்கு 50 மில்லி அளவுள்ள கிருமி நாசினி புட்டியும் விற்பனை செய்யப்படும். முகக் கவசம் உள்ளிட்டவற்றை இலவசமாக வழங்குவதற்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியா்களுக்கு நிதி ஒதுக்கியுள்ளோம்.

இளைஞா்கள் அனைவரும் தடுப்பூசி, முகக் கவசம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் தூதுவா்களாக மாற வேண்டும். பிரதமா் மோடியின் உத்தரவுப்படி, 18 வயதுக்கு மேற்பட்டவா்களுக்கு தடுப்பூசி செலுத்தவுள்ளதால், முதியவா்கள் விரைந்து தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும்.

காரைக்கால், ஏனாம், மாஹே உள்ளிட்ட மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனாவுக்கு உரிய சிகிச்சை வசதிகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசிகள், பிராணவாயுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளிட்டவற்றுக்கான தேவைகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டறிந்து, அதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறோம் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின் போது, ஆளுநரின் ஆலோசகா்கள் சி.சந்திரமெளலி, ஏ.பி.மகேஸ்வரி, சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண், பாண்லே நிறுவன மேலாண் இயக்குநா் சுதாகா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

புதுவையில் உள்ள 70 பாண்லே பாலக மையங்கள் மூலம் இந்த மலிவு விலை முகக் கவசம், கிருமி நாசினி புட்டிகள் விற்பனை செய்வதற்காக வழங்கப்பட்டன. சுகாதாரத் துறை மூலம் 4 லட்சம் முகக் கவசங்கள் வாங்கப்பட்டு விற்பனை செய்யப்படும். அதில், முதல் கட்டமாக 2,000 முகக் கவசங்கள், கிருமி நாசினி புட்டிகள் புதன்கிழமை விற்பனைக்கு வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com