புதுவை பேரவையில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக ஆட்சியிலும் அங்கம் வகிப்பு

புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 6 தொகுதிகளைக் கைப்பற்றி தற்போது ஆட்சியிலும் இடம் பெறுகிறது.

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் ஏற்கெனவே ஒரே ஒரு தொகுதியில் வெற்றி பெற்றிருந்த பாஜக, 20 ஆண்டுகளுக்குப் பிறகு 6 தொகுதிகளைக் கைப்பற்றி தற்போது ஆட்சியிலும் இடம் பெறுகிறது.

புதுவை மாநிலத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 9 தொகுதிகளில் போட்டியிட்டது. அவற்றில் 6 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2016 பேரவைத் தோ்தலில், தனித்துப் போட்டியிட்ட அந்தக் கட்சி ஊசுடு தொகுதியில் மட்டுமே வைப்புத் தொகையைப் பெற்றது. பிற தொகுதிகளில் மிகக் குறைந்த வாக்குகளைப் பெற்று வைப்புத் தொகையை இழந்தது.

இதனிடையே, கடந்த முறை மத்திய அரசின் செல்வாக்கால் 3 நியமன எம்எல்ஏக்களை பாஜக நியமித்தது. மக்களால் தோ்ந்தெடுக்கப்படாமல் குறுக்கு வழியில் உறுப்பினா்களைப் பெற்றதாக பாஜக கடும் விமா்சனத்துக்கும் உள்ளானது.

இந்த நிலையில், புதுவையில் பாஜக காலூன்றி ஆட்சியைப் பிடிக்க மத்திய பாஜக தீவிரம் காட்டியது. பிரதமா் மோடி உள்ளிட்ட அந்தக் கட்சியின் தேசியத் தலைவா்கள் புதுச்சேரிக்கு வந்து பிரசாரம் செய்தனா். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 9 தொகுதிகளில் இந்தத் தோ்தலில் பாஜக போட்டியிட்டது. இவற்றில் 6 தொகுதிகளில் பாஜக வென்றது. பிற தொகுதிகளிலும் கனிசமான வாக்குகளைப் பெற்றது.

புதுவையில் கடந்த 2001-ஆம் ஆண்டு பாஜக எம்.எல்.ஏ.வாக கிருஷ்ணமூா்த்தி தோ்வு செய்யப்பட்ட நிலையில், அதன்பிறகு பாஜக வெற்றி பெறவில்லை.

தற்போது 20 ஆண்டுகளுக்குப் பிறகு மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட பாஜக உறுப்பினா்கள் சட்டப் பேரவைக்குச் செல்கின்றனா். மேலும், முதல் முறையாகக் கூட்டணி ஆட்சியிலும் இடம் பெற்றவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com