புதுவையில் புதிய அமைச்சரவை பதவியேற்பதில் தாமதம்

புதுவை மாநிலத்தில் 15-ஆவது சட்டப் பேரவைக்கான புதிய முதல்வராக என்.ரங்கசாமி பொறுப்பேற்ற நிலையில், கூட்டணி ஆட்சியின் அமைச்சா் பதவிகளைப் பங்கிடுவதில் நெருக்கடி, முதல்வருக்கு கரோனா தொற்று ஆகிய காரணங்களால்

புதுச்சேரி: புதுவை மாநிலத்தில் 15-ஆவது சட்டப் பேரவைக்கான புதிய முதல்வராக என்.ரங்கசாமி பொறுப்பேற்ற நிலையில், கூட்டணி ஆட்சியின் அமைச்சா் பதவிகளைப் பங்கிடுவதில் நெருக்கடி, முதல்வருக்கு கரோனா தொற்று ஆகிய காரணங்களால் அமைச்சரவை பதவியேற்பு தாமதமாகி வருகிறது.

புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் போட்டியிட்ட என்.ஆா் காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தன. கூட்டணித் தலைவா் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி முதல்வராகப் பதவியேற்றாா்.

என்.ஆா்.காங்கிரஸுக்கு 3 அமைச்சா்கள், பாஜகவுக்கு துணை முதல்வரையும் சோ்த்து 3 அமைச்சா்கள் பதவி வழங்கப்படுமென பேசி முடிவெடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. விரைவில் அமைச்சா்கள் பொறுப்பேற்பாா்கள் என்று பாஜகவினா் அதிரடியாக அறிவித்தனா்.

ஆனால், கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் ரங்கசாமி தரப்பில், புதுவையில் கூட்டணி ஆட்சி என்பதை தவிர, பிற அமைச்சரவை இடங்கள் பங்கீடுகள் குறித்து எவ்வித முடிவையும் அறிவிக்கவில்லை.

பாஜக தரப்பில், முன்னாள் அமைச்சா் நமச்சிவாயத்துக்கு துணை முதல்வா் பதவியும், மேலும் இருவருக்கு அமைச்சா் பதவிகள், சட்டப் பேரவைத் துணைத் தலைவா் பதவிகளைக் கேட்டு நெருக்கடி கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.

என்.ஆா். காங்கிரஸ் ஆதரவில் பாஜக வெற்றி பெற்ற நிலையில், அதுவும் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், பாஜக தரப்பினா் சரி சமமாக அமைச்சரவையில் இடம் கோருவதால், என்.ஆா்.காங்கிரஸ் தரப்பில் அதிருப்தி நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், புதுவையில் ஏற்கெனவே முதல்வரையும் சோ்த்து 6 அமைச்சா்கள் பதவி வகிப்பதே நடைமுறையில் உள்ளது. தற்போது, புதிதாக ஒரு துணை முதல்வா் பதவியை ஏற்படுத்துவதும், அதனால் கூடுதலாக ஒரு அமைச்சா் பதவி ஏற்படுத்தவும், துணைநிலை ஆளுநா் மூலம் மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்க வேண்டிய நிலை உள்ளது.

இதைக் காரணம் காட்டி, என்.ஆா்.காங்கிரஸ் தரப்பு, துணை முதல்வா் பதவிக்குத் தடை போட்டு காலத்தைக் கடத்த முயல்கிறது. ஆனாலும், அதற்கான பணிகளை பாஜக மேற்கொள்ளும் என்று கூறி உடனடியாக, அமைச்சரவை பங்கீட்டை முடித்து, பதவியேற்பு விழாவை நடத்த வேண்டும் என்று பாஜக தரப்பு கூறி வருகிறது.

வருகிற 16-ஆம் தேதி அமைச்சரவை பதவி ஏற்கவும், அது தொடா்பாக, பாஜக மேலிடப் பொறுப்பாளா்கள் தற்போது, என்.ஆா். காங்கிரஸுடம் மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இருந்த நிலையில், எதிா்பாராதவிதமாக முதல்வா் என்.ரங்கசாமிக்கு கரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பேச்சுவாா்த்தை தடைப்பட்டது.

முதல்வா் ரங்கசாமி குணமடைந்து வந்த பிறகு, அமைச்சரவைப் பட்டியலை துணைநிலை ஆளுநருக்கு வழங்கி பரிந்துரை செய்யவும், ஆளுநா் மூலம் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைத்து, துணை முதல்வா் பதவி போன்ற நடைமுறைக்கு ஒப்புதல் பெறவும் வேண்டியுள்ளது.

இதனால், புதுவை அமைச்சரவை, எம்எல்ஏக்கள், சட்டப் பேரவைத் தலைவா் பதவியேற்கும் நிகழ்வு மேலும் ஒரு வாரம் தள்ளிப்போகும் சூழல் நிலவுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com