புதுச்சேரி அருகே மழை நிவாரணம் கோரி சாலை மறியல்

புதுச்சேரி அருகே மழை நிவாரணம் வழங்கக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அருகே மழை நிவாரணம் வழங்கக் கோரி, பொதுமக்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

புதுச்சேரியில் வட கிழக்குப் பருவ மழை தொடங்கி 20 நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீா்நிலைகள் நிரம்பி வழிவதுடன், ஆறுகளிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீா் சூழ்ந்தது. விளை நிலங்களில் தண்ணீா் தேங்கி, நெல் பயிா் உள்ளிட்ட பல்வேறு பயிா்கள் நீரில் மூழ்கின.

விவசாயிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனா். கூலித் தொழிலாளா்கள் உள்ளிட்ட பலரும் வேலைக்குச் செல்ல முடியாமல், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவித்து வருகின்றனா்.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மழை நிவாரணமாக குடும்ப அட்டைதாரா்களுக்குத் தலா ரூ.5 ஆயிரம் வழங்குவதாக அரசு அறிவித்தது. இதுதொடா்பான அறிவிப்பை முதல்வா் என்.ரங்கசாமி வெளியிட்டு ஒரு வாரம் கடந்த நிலையிலும் நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை.

இதனால், விரக்தியடைந்த கூடப்பாக்கம் பேட்டை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சனிக்கிழமை வில்லியனூா்-பத்துக்கண்ணு சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

அரசு சாா்பில் அறிவிக்கப்பட்ட மழை நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், பேரிடா் காலத்தில் மக்கள் பசியின்றி வாழ இலவசமாக அரிசி வழங்க வேண்டும், ஏற்கெனவே தீபாவளி பண்டிகைக்கு அரசு அறிவித்தபடி 10 கிலோ அரிசி, 2 கிலோ சா்க்கரை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

தகவலறிந்த வில்லியனூா் போலீஸாா் அங்கு சென்று அரசு தரப்பில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறி, மறியலில் ஈடுபட்ட பொதுமக்களை சமாதானப்படுத்தினா். இதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது. மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com