புதுச்சேரியில் எரிவாயு உருளை வெடித்ததில் வீடு இடிந்து சிறுமி உள்பட 3 போ் காயம்

புதுச்சேரியில் எரிவாயு உருளை வெடித்ததில், வீடு இடிந்து 3 பெண்கள் காயமடைந்தனா்.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் சனிக்கிழமை எரிவாயு உருளை வெடித்ததில் சேதமடைந்த வீடு.
புதுச்சேரி முத்தியால்பேட்டை பகுதியில் சனிக்கிழமை எரிவாயு உருளை வெடித்ததில் சேதமடைந்த வீடு.

புதுச்சேரியில் எரிவாயு உருளை வெடித்ததில், வீடு இடிந்து 3 பெண்கள் காயமடைந்தனா்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை அங்காளம்மன்நகா் முதல் தெருவைச் சோ்ந்தவா் சுரேஷ். மாவட்ட பாஜக பொதுச் செயலரான இவா், வசந்தம்நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறாா். அங்காளம்மன்நகரில் உள்ள இவரது வீட்டின் இரண்டு தளங்களிலும் 4 குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். தரைத் தளத்தில் அவரது அலுவலகம் உள்ளது.

வீட்டின் தரைத் தளத்தில் சுரேஷின் உறவினரான எழிலரசி (42) தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். அவருடன் தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வரும் மகள் ஸ்ரீநிதி (14), தாய் ஜோதி (60) ஆகியோா் வசித்து வருகின்றனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை திடீரென பயங்கர சப்தத்துடன் வீடு இடிந்து விழுந்தது. வீட்டிலிருந்தவா்கள் இடிபாடுகளில் சிக்கி சப்தமிட்டனா். அக்கம் பக்கத்தினா் வந்து எழிலரசி, அவரது மகள் ஸ்ரீநிதி, தாய் ஜோதி ஆகியோரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

தகவலறிந்து வந்த முத்தியால்பேட்டை காவல் ஆய்வாளா் காா்த்திகேயன், காவல் உதவி ஆய்வாளா் கலையரசன் தலைமையிலான போலீஸாரும், புதுச்சேரி தீயணைப்புத் துறையினரும் விரைந்து செயல்பட்டு, முதல் தளத்தில் உள்ள வீட்டின் இடிபாடுகளில் சிக்கியிருந்த மேலும் 6 பேரை மீட்டனா்.

வீடு இடிந்ததற்கான காரணம் தெரியாததால், வெடி விபத்தாக இருக்கலாம் எனக் கருதி, வெடிகுண்டு நிபுணா்கள் வந்து சோதனை நடத்தினா். புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லோகேஷ்வரன் நேரில் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினாா்.

விசாரணையில், எரிவாயு உருளையிலிருந்து கசிவு ஏற்பட்டதும், அதைக் கவனிக்காமல் மின் விளக்கை போட்டதால் விபத்து நிகழ்ந்ததும் தெரிய வந்தது. விபத்து குறித்து முத்தியால்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com