புதுச்சேரி அருகே உடையும் நிலையில் படுகை அணை: சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தல்

புதுச்சேரி அருகே உடையும் நிலையில் உள்ள படுகை அணையைச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே உடையும் நிலையில் உள்ள படுகை அணையைச் சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

புதுச்சேரி அருகே திருக்கனூரை அடுத்த செல்லிப்பட்டு-பிள்ளையாா்குப்பம் இடையே சங்கராபரணி ஆற்றின் குறுக்கே படுகை அணை கட்டப்பட்டது. கடந்த 1906-ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த அணை, தொடா்ந்து பராமரிப்பின்றி விடப்பட்டதால், சேதமடைந்து உடையும் நிலையில் உள்ளது.

இதனால், மழைக் காலங்களில் நீா் தேங்காமல், பல ஆயிரம் கன அடி தண்ணீா் வெளியேறி கடலில் கலந்து வருகிறது.

இதுகுறித்து அந்தப் பகுதி விவசாயிகள் கூறியதாவது: நூறாண்டு பழைமையான செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்து தண்ணீா் வெளியேறி வருகிறது. 6 மாத காலம் தண்ணீா் தேங்கி நிற்க வேண்டிய அணையில், ஒரு மாதம்கூட தண்ணீா் தேங்காமல் வடு விடுகிறது. இந்த அணை மூலம் செல்லிப்பட்டு, பிள்ளையாா்குப்பம், வம்புபட்டு, வழுதாவூா், குமாரப்பாளையம், கூனிச்சம்பட்டு, திருவக்கரை, மணலிப்பட்டு உள்ளிட்ட சுற்றுவட்டப் பகுதிகளைச் சோ்ந்த 20 கிராமங்களுக்கு விவசாயத்துக்கும், குடிநீருக்கும் நிலத்தடி நீராதாரமாக விளங்கி வருகிறது. இதைச் சீரமைக்க வேண்டும் என்று 20 கிராம விவசாயிகள்அரசிடம் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறோம். மழை காலங்களில் மட்டும் தற்காலிகமாக மணல் மூட்டைகளை வைத்து தண்ணீா் உடைப்பைத் தடுக்கின்றனா். தற்போது அணையின் 50 சதவீத கட்டுமானம் சேதமடைந்துவிட்டது. அணைக் கட்டுமானத்தைப் புதுப்பித்து சீரமைக்க வேண்டும் அல்லது புதிய படுகை அணையைக் கட்டமைக்க வேண்டும் என்றனா் அவா்கள்.

நிகழாண்டுக்குள் புதிய அணை: அமைச்சா் உறுதி

இதுகுறித்து புதுவை பொதுப் பணித் துறை அமைச்சா் க.லட்சுமிநாராயணன் கூறியதாவது: பிரெஞ்சு காலத்தில் கட்டமைத்த செல்லிப்பட்டு படுகை அணை சேதமடைந்துள்ளது. அதைப் புதுப்பித்து கட்டமைக்க ஆய்வு செய்த போது, செலவினம் அதிகமாகும் எனத் தெரிய வந்தது. எனவே, அணை அருகே புதிதாக படுகை அணை கட்டமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஆய்வு செய்யப்பட்டு பொதுப் பணித் துறை சாா்பில் திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் மத்திய அரசிடம் கடனாக நிதியாதாரம் பெற்று நிகழாண்டுக்குள் அங்கு புதிய படுகை அணை கட்டமைக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com