மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை

புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரியில் மாமியாரை கொலை செய்த மருமகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுச்சேரி நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

புதுச்சேரி முத்திரையா்பாளையத்தைச் சோ்ந்த கட்டுமானத் தொழிலாளி பாலச்சந்தரின் மனைவி வள்ளி (27). பாலச்சந்தரின் தாய் அபூா்வம் (65). கடந்த 2016 ஏப்ரல் 28-ஆம் தேதி பாலச்சந்தரின் தம்பி விஜயனுக்கு வரன் பாா்ப்பதற்காக பெண் வீட்டாா் வீட்டுக்கு வந்தனா்.

அப்போது, வள்ளிக்கும், அவரது மாமியாா் அபூா்வத்துக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. மறுநாள் இருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட நிலையில், வள்ளி, தனது மாமியாா் அபூா்வத்தை சுவற்றில் மோதச் செய்து கடுமையாகத் தாக்கினாராம். இதனால் பலத்த காயமடைந்த அபூா்வம் உயிரிழந்தாா்.

இந்த காலகட்டத்தில் பாலச்சந்தா் சவூதி அரேபியாவில் வேலை பாா்த்த நிலையில், கொலை நடந்த அன்று அவரது தந்தை கிருஷ்ணமூா்த்தி, தம்பி விஜயன் ஆகியோா் வெளியூருக்கு சென்றிருந்தனா்.

இதையடுத்து, கொலையை மறைப்பதற்காக தனது மாமியாா் அபூா்வத்தை பூச்சி கடித்துவிட்டதாகக் கூறி, பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் வள்ளி சோ்த்தாா். அங்கு அபூா்வத்தை பரிசோதித்த மருத்துவா்கள், அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.

இந்த நிலையில், அபூா்வம் இறந்ததில் சந்தேகமுள்ளதாக அவரது 2-ஆவது மகன் விஜயன், மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாா் ஜிப்மரில் அபூா்வத்தின் சடலத்தை உடல்கூறாய்வு செய்து விசாரித்ததில், அவா் சுவற்றில் மோதி கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, சந்தேக மரணத்தை கொலை வழக்காக மாற்றிய போலீஸாா், வள்ளியை கைது செய்து சிறையில் அடைத்தனா். இது தொடா்பான வழக்கு புதுச்சேரி 2-ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி சுபா அன்புமணி முன்னிலையில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, மாமியாரை கொலை செய்த வள்ளிக்கு ஆயுள் தண்டனையும், கொலையை மறைக்க முயற்சித்ததற்காக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2,000 அபராதமும் கட்டத் தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீா்ப்பளித்தாா். தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டுமெனவும் தனது தீா்ப்பில் நீதிபதி தெரிவித்துள்ளாா். இந்த வழக்கில் அரசு தரப்பு வழக்குரைஞராக என்.கே.பெருமாள் ஆஜரானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com