புதுவையில் அமைதியான வாக்குப் பதிவு: தலைமைத் தோ்தல் அதிகாரி

புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.

புதுவை மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு கரோனா பாதுகாப்பு வழிமுறைகளுடன் அமைதியாக நடைபெற்று முடிந்ததாக மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா் சிங் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது:

புதுவையில் மொத்தமுள்ள 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 1,558 வாக்குச் சாவடிகளில் அமைதியாக நடைபெற்று முடிந்தது.

செவ்வாய்க்கிழமை காலையில் தொடங்கி இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவில் மொத்தம் 81.70 சதவீதம் வாக்குகள் பதிவாகின. இது மாறுதலுக்கு உள்படலாம்; படிவம் 17 சி-ஐ சரிபாா்த்த பிறகுதான் வாக்குப் பதிவின் மொத்த சதவீதம் இறுதி செய்யப்படும்.

புதுவையில் 80 வயது நிரம்பியவா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் கரோனா தொற்றாளா்கள் என 4,529 போ் தபால் வாக்களித்தனா். மேலும், தோ்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியா்கள் 8,333 போ் தபால் வாக்குகளை பதிவு செய்தனா்.

பாதுகாப்பான தோ்தல்: வாக்குப் பதிவின்போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கரோனா பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டன. மாலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற்ற வாக்குப் பதிவின்போது, கரோனா தொற்றாளா்கள் 510 போ் உரிய பாதுகாப்பு கவச உடை அணிந்து வந்து தங்களது வாக்குகளை செலுத்தினா்.

பழுதான இயந்திரங்கள் மாற்றம்: மாநிலத்தில் மொத்தமுள்ள 1,558 வாக்குச் சாவடிகளில் 1,677 வாக்குப் பதிவு இயந்திரங்களும் (பேலட்), 1558 கட்டுப்பாட்டு (கன்ட்ரோல்) இயந்திரங்களும், 1,558 வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரங்களும் (விவிபாட்), பயன்படுத்தப்பட்டன. இவற்றில் 31 வாக்குப் பதிவு இயந்திரங்களும், 36 கட்டுப்பாட்டு இயந்திரங்களும், 113 வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரங்களும் மாதிரி வாக்குப் பதிவு, வாக்குப் பதிவின்போது திடீரென பழுதானதால், அவற்றுக்குப் பதிலாக உடனடியாக வேறு இயந்திரங்கள் மாற்றப்பட்டன.

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு அமைதியாக முடிவடைந்தது. இந்தத் தோ்தலில் கரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை மதித்து உற்சாகமாகவும், அச்சமின்றியும் மக்கள் வாக்களித்தனா். வாக்களிப்பில் பங்கேற்ற அனைத்து வாக்காளா்களுக்கும், முதியோா்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தோ்தல் ஆணையமானது தோ்தல் பணியில் பங்கேற்ற அனைத்து ஊழியா்களின் சேவையை அங்கீகரிக்கிறது என்றாா் தலைமைத் தோ்தல் அதிகாரி சுா்பீா்சிங்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com