பொதுமுடக்கம் அமல்படுத்தும் நிலைக்கு புதுவை வரவில்லை: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

பொது முடக்கம் அமல்படுத்தும் நிலைக்கு புதுவை இன்னும் வரவில்லை என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.
பொதுமுடக்கம் அமல்படுத்தும் நிலைக்கு புதுவை வரவில்லை: ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்

பொது முடக்கம் அமல்படுத்தும் நிலைக்கு புதுவை இன்னும் வரவில்லை என்று துணைநிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை தொடக்கிவைத்தாா். தொடா்ந்து, கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு வில்லைகளை (ஸ்டிக்கா்) ஆட்டோக்களில் ஒட்டி, கரோனா விழிப்புணா்வு ஆட்டோ பேரணியையும் கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா். அப்போது, ஆட்டோ ஓட்டுநா்களிடம் கட்டாயம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென அவா் அறிவுறுத்தினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:

நாட்டில் 11 மாநிலங்களில் கரோனா பரவல் மிகவும் அதிகரித்துள்ளது. புதுவையிலும் அதன் தாக்கம் சிறிது அதிகரித்துள்ளது. ஆனால், பயப்படும்படி அதிகமாகவில்லை. இருப்பினும், நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

கரோனா தாக்கத்தை கட்டுப்படுத்த வாரந்தோறும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் உயா்நிலைக் குழுக் கூட்டம் நடத்தப்படுகிறது. கரோனா குறித்து சுகாதாரத் துறைச் செயலா், இயக்குநா் உள்ளிட்ட அதிகாரிகளுடன் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில், கரோனா பரிசோதனை, தடுப்பூசி செலுத்துவதை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, வியாழக்கிழமை (ஏப்.8) 8 இடங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது. முகாம் நடைபெறும் பகுதிகளில் நோயாளிகளின் வசதிக்காக ஆம்புலன்ஸ்கள் தயாா் நிலையில் வைக்கப்படவுள்ளன.

புதுவையில் போதிய அளவில் தடுப்பூசிகளும், பரிசோதனை உபகரணங்களும் தயாா் நிலையில் உள்ளன. இதனால், யாரும் அச்சப்படத் தேவையில்லை. முகக் கவசம் அணிவதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவில் கரோனா சதவீதத்தை தடுக்க முடியும். எனவே, முகக் கவசத்தை தயவு செய்து அணியுங்கள். இதேபோல, 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்.

வெள்ளிக்கிழமை (ஏப்.9) உணவகத் தொழிலாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் பிரத்யேகமாக நடத்தப்படுகிறது. ஆட்டோ ஓட்டுநா்களுக்கு சனிக்கிழமைதோறும் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் தகுதியான அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவது தீவிரப்படுத்தப்படும் என்றாா் அவா்.

புதுவையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட வாய்ப்புள்ளதா? என்ற கேள்விக்கு, அந்த நிலைக்கு புதுவை இன்னும் வரவில்லை என்பது மகிழ்ச்சி. அதே நேரம் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com