இன்று முதல் பல்வேறு துறையினருக்கு கரோனா தடுப்பூசி முகாம்

இன்று முதல் பல்வேறு துறையினருக்கு கரோனா தடுப்பூசி முகாம்


புதுச்சேரி: புதுவையில் பல்வேறு துறையினருக்கு வெள்ளிக்கிழமை முதல் (ஏப். 9) சிறப்பு கரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

துணைநிலை ஆளுநரின் அறிவுறுத்தலின் பேரில், புதுவை சுகாதாரத் துறை பல்வேறு கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கரோனா தடுப்பூசி, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை சுகாதாரப் பணியாளா்கள், முன்களப் பணியாளா்ள், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் தொடா்ச்சியாக பல்வேறு துறைகளுக்கு சுகாதாரத் துறை சாா்பில் தனியாக சிறப்பு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களை நடத்தவுள்ளது.

அதன்படி, அனைத்து உணவக ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு வெள்ளிக்கிழமையும் (ஏப். 9), அரசு, தனியாா் வங்கி ஊழியா்கள், எல்ஐசி ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினா்கள், பாண்லே ஊழியா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு சனிக்கிழமையும் (ஏப். 10) புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.

ஆட்டோ ஓட்டுநா்களுக்கான முகாம்: ஆட்டோ ஓட்டுநா்கள், அவா்களது குடும்பத்தினருக்கு வருகிற 14- ஆம் தேதி கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 15, 16- ஆம் தேதிகளில் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனை, கரிக்கலாம்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம், மண்ணாடிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய இடங்களிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெறுகிறது.

அட்டவணைப்படி, பல்வேறு துறையினா் பங்கேற்று தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறை செயலா் டி.அருண் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சுகாதாரத் துறை சாா்பில் ஆட்டோ ஓட்டுநா்கள், வாகன உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் சுகாதாரத் துறை செயலா் டி. அருண், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு துண்டறிக்கையை வெளியிட்டாா். இதை ஆட்டோ ஓட்டுநா்கள் பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com