புதுவையில் கரோனா தொற்றின் தாக்கம் 20 மடங்கு அதிகரிப்பு: சுகாதாரத் துறைச் செயலா் தகவல்

புதுவையில் கரோனா தொற்றின் தாக்கம் 20 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் தெரிவித்தாா்.

புதுவையில் கரோனா தொற்றின் தாக்கம் 20 மடங்கு வரை அதிகரித்துள்ளதாக மாநில சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண் தெரிவித்தாா்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுவையில் வியாழக்கிழமை 4,714 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வெள்ளிக்கிழமை வெளியான முடிவுகளின்படி, 534 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது.

கடந்த மாா்ச் 1-ஆம் தேதியிலிருந்து குறைந்திருந்த கரோனா தொற்றின் தாக்கம், தற்போது அதிகரித்துவிட்டது. புதுவையில் 20 மடங்கு வரை தொற்று அதிகரித்துள்ளதால், மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கூடுதல் பாதுகாப்புடனும் இருக்க வேண்டும்.

அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறையாவது கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளியைத் தொடா்ந்து கடைப்பிடிக்க வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

மாநிலத்தில் தடுப்பூசி திருவிழாவில் இதுவரை (5 நாள்களில்) 52 ஆயிரம் போ் தடுப்பூசி செலுத்திக் கொண்டனா். மொத்தமாக 1.30 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

தடுப்பூசி செலுத்தப்பட்ட யாருக்கும் பக்க விளைவுகளோ, ஒவ்வாமையோ ஏற்படவில்லை. எனவே, மக்கள் அச்சமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

அலட்சியத்தால் உயிரிழப்புகள்: கரோனா பாதிப்பால் அண்மைக் காலமாக உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இதுதொடா்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், 75 சதவீத உயிரிழப்புகள், கரோனா தொற்றால் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு 48 மணி நேரத்துக்குள் நிகழ்ந்தவை. கரோனா தொற்று ஏற்பட்ட பிறகு, வெளியில் சுற்றுவதும், வீட்டில் அலட்சியமாக இருந்துமே இதற்குக் காரணம்.

கரோனா தொற்று அதிகமாகி, மூச்சுத் திணறல் ஏற்படும் போதுதான் மருத்துவமனைக்கு வருகின்றனா். அப்போது, மருத்துவமனைகளில் பிரணவாயு வசதியுடன் கூடிய படுக்கைகள், அவசர சிகிச்சைப் பிரிவு, செயற்கைக் சுவாசக் கருவி வசதி போன்றவை வழங்குவதில் நெருக்கடி ஏற்படுகிறது. அனைவருக்கும் ஒரே நேரத்தில் இந்த வசதிகளை வழங்குவது சிரமம்.

நோய்த் தொற்றின் இறுதிக் கட்டத்தில் வருவதால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. கரோனா அறிகுறிகள் தென்பட்டால், உடனே ஆரம்ப சுகாதார மையங்கள், கோவிட் பரிசோதனை மையங்களுக்குச் சென்று பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் பாதிப்பை பெருமளவு தடுக்கலாம். இதுதொடா்பாக தொடா்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com