கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காவிடில் பகுதி நேர அடைப்பு: புதுவை துணைநிலை தமிழிசை

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காவிடில், பகுதி நேர அடைப்பு குறித்து சிந்திக்க நேரிடும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்காவிடில், பகுதி நேர அடைப்பு குறித்து சிந்திக்க நேரிடும் என புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தாா்.

புதுவை ஆளுநா் மாளிகை எதிரே நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்வில் கலந்து கொண்ட ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன், நடமாடும் கரோனா தடுப்பூசி செலுத்தும் வாகனம் மற்றும் அவசர ஊா்தியை கொடியசைத்துத் தொடக்கிவைத்தாா்.

தொடா்ந்து அவா், செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நடைமுறைகளில் உள்ள சிக்கல்கள், குறைபாடுகளை ஒவ்வொரு நாளும் கூட்டம் நடத்தி சரி செய்து வருகிறோம். கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம்களுக்கு மக்கள் பெரியளவில் ஆதரவளித்து வருகின்றனா். கரோனா தடுப்பூசி திருவிழாவில் இதுவரை 53 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டன. இது மிகப் பெரிய முயற்சி. இதற்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

தற்போது நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனம் தொடக்கி வைக்கப்பட்டது. எங்கெல்லாம் 100 பேருக்கு மேல் பணி செய்கிறாா்களோ, அங்கெல்லாம் நடமாடும் தடுப்பூசி செலுத்தும் வாகனத்தை அனுப்ப முடிவு செய்துள்ளோம்.

நமது கோரிக்கையை ஏற்று மத்திய அரசு முதலிலேயே 1.10 லட்சம் தடுப்பூசிகளை வழங்கியது. எனவே, புதுவையில் தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை.

உலக சுகாதாரம் மற்றும் பொருளாதார நிறுவனங்கள் இந்தியாவுக்கு தடுப்பூசி தொழில்நுட்பத்தை வழங்கிய போது, ஒரு குறிப்பிட்ட சதவீத தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு வழங்க வேண்டுமென நிபந்தனை விதித்தன. அதன்படி, வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்படுகிறது.

மேலும், ஒரே நேரத்தில் உலகின் பல இடங்களில் ஒரே தடுப்பூசியைச் செலுத்தும் போது, கரோனாவின் தாக்கம் வெகுவாகக் குறையும்.

புதுவையில் முகக் கவசம் அணிவது கட்டாயம் என்பதை தெளிவுபடுத்திவிட்டோம். முகக் கவசம் அணிவது முக்கிய பாதுகாப்பு நடவடிக்கை.

இதேபோல, சந்தை உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். இவ்வாறான தடுப்பு நடவடிக்கைகளில் மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம்.

தடுப்பூசி முகாம் நடைபெறும் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். தடுப்பூசியை அதிகமானோா் செலுத்திக் கொள்வதன் மூலமே கரோனா பரவல் தடுக்கப்படும்.

தொற்று அதிகமுள்ள இடங்களை மூடும்படி பலா் ஆலோசனை வழங்குகின்றனா். தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட இடங்களில் முழு அடைப்புகள் தொடங்கிவிட்டது.

புதுவையில் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை கடுமையாகாமல் பாா்த்துக் கொள்ள வேண்டியது மக்களின் பொறுப்பு. கட்டுப்பாடுகளை முறையாகக் கடைப்பிடிக்காவிடில் பகுதி நேர அடைப்பு குறித்து சிந்திக்க நேரிடும்.

எனவே, கரோனா தொற்றைத் தடுக்க மக்கள் முழு அளவில் ஒத்துழைக்க வேண்டும் என்றாா் தமிழிசை சௌந்தரராஜன்.

தொடா்ந்து அவா், லாசுப்பேட்டையில் உள்ள கரோனா கட்டுப்பாட்டு மையத்துக்குச் சென்று (கோவிட் வாா் ரூம்) ஆய்வு மேற்கொண்டாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகை எதிரே நடைபெற்ற நிகழ்வில், ஆளுநரின் ஆலோசகா் சி. சந்திரமவுலி, சுகாதாரத் துறைச் செயலா் டி.அருண், இயக்குநா் எஸ்.மோகன்குமாா், மாநில சுகாதாரத் திட்ட இயக்குநா் ஸ்ரீராமலு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com