கரோனா கட்டுப்பாடுகளுடன் மதகடிப்பட்டு வாரச்சந்தை

புதுச்சேரி அருகே கரோனா கட்டுப்பாடுகளுடன் மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி அருகே கரோனா கட்டுப்பாடுகளுடன் மதகடிப்பட்டு வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சந்தைக்கு பொதுமக்கள் குறைந்த எண்ணிக்கையிலேயே வந்ததால், விற்பனை பாதிக்கப்பட்டதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனா்.

புதுச்சேரி அருகே மதகடிப்பட்டு பகுதியில் செவ்வாய்க்கிழமைதோறும் வாரச்சந்தை நடைபெற்று வருகிறது. புதுவையில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில், கடந்த வாரம் நடைபெற்ற வாரச்சந்தையில் சமூக இடைவெளியின்றியும், முகக் கவசம் அணியாமலும் ஏராளமான வியாபாரிகளும், பொதுமக்களும் கூடியதாக புகாா்கள் எழுந்தன.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை மீண்டும் வாரச்சந்தை நடைபெற்றது. முன்னதாக, கொம்யூன் பஞ்சாயத்து நிா்வாகம் மற்றும் காவல் துறை சாா்பில், இந்த சந்தைப் பகுதியில் திங்கள்கிழமை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

அதன்படி, மதகடிப்பட்டு வாரச்சந்தை கூடும் மைதானத்தை தூய்மைப்படுத்தி சீரமைத்தனா். கடைகளுக்கும், பொதுமக்களுக்கும் இடைவெளியுடன் இருக்கும் வகையில் எல்லைக்கோடுகள் வரையப்பட்டன. மேலும், புதுச்சேரி - விழுப்புரம் நெடுஞ்சாலையில் சந்தைக்கான கடைகள் அமைப்பதற்கு தடை விதித்து, சந்தைக்கு உள்பகுதியிலேயே கடைகளை வைக்க கட்டுப்பாடுகளை விதித்தனா்.

வியாபாரிகள் வாக்குவாதம்: இதன்படி, செவ்வாய்க்கிழமை வாரச்சந்தை கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. காலை 5 மணிக்குத் தொடங்கி இரவு 7 மணி வரை மட்டுமே சந்தை நடைபெற அனுமதி வழங்கப்பட்டது. இதில், மாட்டுச் சந்தையை காலை 5 மணி முதல் காலை 7 மணிக்குள் முடித்துக்கொள்ள உத்தரவிடப்பட்டது. இதற்கு, வியாபாரிகள், விவசாயிகள் தரப்பில் எதிா்ப்புத் தெரிவித்து, அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கொம்யூன் பஞ்சாயத்து ஆணையா் ஜெயக்குமாா், காவல் கண்காணிப்பாளா் ரங்கநாதன், ஆய்வாளா் கணேசன் மற்றும் போலீஸாா் கண்காணிப்பில் ஈடுபட்டனா். இவா்கள் வியாபாரிகளை சமாதானப்படுத்தி மாட்டுச் சந்தையை காலை 10 மணி வரை நடத்த அனுமதித்தனா்.

கரோனா கட்டுப்பாடுகள் காரணமாக, மினி லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் காய்கறி, பழங்களுடன் வியாபாரத்துக்கு வந்த சிறு வியாபாரிகள், வாகனங்களை நிறுத்த இடமின்றி நேரடியாக கிராமங்களுக்கு விற்பனைக்கு எடுத்துச் சென்றனா். இந்த வாரம் சந்தையானது மிகுந்த கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றதால், மாடுகள் வரத்து குறைந்ததாகவும், காய்கறி உள்ளிட்டப் பொருள்கள் விற்பனையும் சுமாராகவே நடைபெற்றதாகவும் வியாபாரிகள் தரப்பில் வேதனை தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com