அரசு மரியாதையுடன் எழுத்தாளா் மனோஜ் தாஸின் உடல் தகனம்

அரசு மரியாதையுடன் எழுத்தாளா் மனோஜ் தாஸின் உடல் தகனம்

உடல் நலக் குறைவால் காலமான, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மனோஜ் தாஸின் உடல் புதுச்சேரியில் புதன்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

உடல் நலக் குறைவால் காலமான, சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளா் மனோஜ் தாஸின் உடல் புதுச்சேரியில் புதன்கிழமை அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஒடிஸா மாநிலம், பாலசூா் மாவட்டம், சங்கரி என்ற பகுதியில் பிறந்த மனோஜ் தாஸ் (87), கடந்த 1963-ஆம் ஆண்டு முதல் புதுச்சேரி வெள்ளை நகரப் பகுதியான துய்பே வீதியில் மனைவி பிரதிஜ்னா தேவியுடன் வசித்து வந்தாா். சிறுநீரகக் கோளாறு காரணமாக, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரம மருத்துவமனையில் சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு காலமானாா்.

ஒரியா, ஆங்கிலம் ஆகிய இரு மொழி எழுத்தாளரான இவா், நூற்றுக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளாா். ‘‘மிஸ்ட்ரி ஆஃப் மிஸ்ஸிங் கேப் அண்டு அதா்ஸ் ஸ்டோரிஸ்’’ என்ற சிறுகதைத் தொகுப்புக்காக கடந்த 1972-இல் சாகித்ய அகாதெமி விருதும், 2001 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும், 2020 ஆம் ஆண்டில் பத்மபூஷன் விருதும் பெற்றாா்.

உடல் தகனம்: புதுச்சேரி துய்பே வீதியில் உள்ள மனோஜ்தாஸ் வீட்டில் புதன்கிழமை வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு, புதுவை முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, முன்னாள் எம்எல்ஏ க. லட்சுமிநாராயணன் ஆகியோா் நேரில் அஞ்சலி செலுத்தினா். தொடா்ந்து, அவரது உடல் கருவடிக்குப்பம் மயானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு காவல் துறை சாா்பில் 21 குண்டுகள் முழங்க, முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

ஆளுநா் இரங்கல்: எழுத்தாளா் மனோஜ் தாஸ் மறைவுக்கு துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் வெளியிட்ட இரங்கல் செய்தி:

முதுபெரும் எழுத்தாளா், பத்திரிகை ஆசிரியா், அரவிந்தா் சிந்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டவரான மனோஜ் தாஸ், உடல் நலக்குறைவால் காலமானாா் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அவரது இலக்கியப் புலமையும், சமூகச் சிந்தனையும், மனித நேயப் பண்பும், அவரை தனித்துவமிக்க எழுத்தாளராக அடையாளப்படுத்தின.

பத்மஸ்ரீ, பத்ம பூஷண் விருதுகள், சாகித்ய அகாதெமி விருது, இந்தியாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஆய்வறிஞா் விருது ஆகியவற்றை பெற்ற அவரது இழப்பு இந்திய இலக்கியத்துக்கு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினா், நண்பா்கள், இலக்கியவாதிகள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவரது ஆன்மா அமைதி பெறவும் வேண்டுகிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com