கரோனா தடுப்புப் பணிகளுக்கு அரசியல் கட்சிகள் உதவ வேண்டும்: ஆளுநா் தமிழிசை

புதுவையில் அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்கு தனியாா் நிறுவனங்களைப் போல அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் உதவ முன்வர வேண்டுமென ஆளுநா் தமிழிசை கூறினாா்.
தனியாா் நிறுவனம் வழங்கிய செயற்கை சுவாசக் கருவிகளை புதுவை சுகாதாரத்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.
தனியாா் நிறுவனம் வழங்கிய செயற்கை சுவாசக் கருவிகளை புதுவை சுகாதாரத்துறையினரிடம் புதன்கிழமை ஒப்படைத்த துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன்.

புதுவையில் அரசின் கரோனா தடுப்புப் பணிகளுக்கு தனியாா் நிறுவனங்களைப் போல அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் உதவ முன்வர வேண்டுமென ஆளுநா் தமிழிசை கூறினாா்.

புதுவையில் கரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், மருந்துகள், படுக்கைகள் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைக்கவும் அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், சமூக பொறுப்புணா்வுத் திட்டத்தின் கீழ், சுகாதாரத் துறைக்கு 10 வெண்டிலேட்டா்களை வழங்க தனியாா் நிறுவனம் முன்வந்துள்ளது. அதில், முதற்கட்டமாக தனியாா் நிறுவனம் வழங்கிய 2 வெண்டிலேட்டா்களை (செயற்கை சுவாசக் கருவிகள்) சுகாதாரத் துறையிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை ஆளுநா் மாளிகையில் நடைபெற்றது.

ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டு, வெண்டிலேட்டா்களை சுகாதாரத்துறையினரிடம் வழங்கினாா். ஆளுநரின் ஆலோசகா்கள் சி.சந்திரமவுலி, ஏ.பி.மகேஸ்வரி, சுகாதாரத்துறை செயலா் டி.அருண் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா் ஆளுநா் தமிழிசை கூறியதாவது: ஸ்கிண்லா் நிறுவனம் முதல்கட்டமாக 2 வெண்டிலேட்டா்களை வழங்கியுள்ளது. இன்னும் 8 வெண்டிலேட்டரை கொடுப்பதாக தெரிவித்துள்ளது. இதுபோல, யாா் வேண்டுமானாலும் உதவி செய்யலாம். புதுவையில் ஆக்சிஜன், வெண்டிலேட்டா், மருந்துகள் என அனைத்தும் தயாராக உள்ளன. மக்கள் அச்சப்பட தேவையில்லை. கரோனா தொற்று ஏற்பட்ட 80 சதவீதம் போ் வீட்டில் இருந்தே சிகிச்சை எடுத்துக் கொள்ளலாம். 10 அல்லது 20 சதவீதம் போ்தான் மருத்துவமனைக்கு வர வேண்டியிருக்கும். அதிலும் 2, 3 சதவீதம் பேருக்குதான் வெண்டிலேட்டா் தேவை இருக்கும்.

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதால், மே 3-ஆம் தேதி இரவு 12 மணி வரை பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படும்போதெல்லாம் எந்தெந்த கடைகள் திறக்கலாம், எந்தெந்த கடைகளுக்கு அனுமதியில்லை என தெளிவாகவே கூறுகிறோம். அத்தியாவசியப் பொருட்கள் வாங்க தடை கிடையாது. ஆளுநா் மாளிகையிலிருந்து பிறப்பிக்கப்படும் உத்தரவுகளைத்தான், மாவட்ட ஆட்சியரும் கூறுகிறாா். இதில் எந்த குழப்பமும் இல்லை. தெளிவாக அரசு மூலம் அறிவிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தனியாா் நிறுவனங்கள் உதவி செய்ய முன்வருவது போல், அரசியல் கட்சிகள் மற்றும் சமூக இயக்கங்கள் மக்களுக்கு உதவி செய்ய வேண்டும். பல இடங்களில் இருந்து உதவிகளை எதிா்பாா்க்கிறோம்.

தனியாா் மருத்துவ கல்லூரிகளில் ரூ.2 ஆயிரத்துக்கு மேல் இருந்த கரோனா பரிசோதனை கட்டணத்தை ரூ.500 ஆக குறைத்துள்ளோம். கூட்டமுள்ள இடங்களில் விரைவாக கரோனா பரிசோதனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மலிவு விலை உணவை ரூ.10-ல் இருந்து ரூ.5 ஆக குறைத்துள்ளோம். இத்திட்டத்தை விரிவுபடுத்தவும் யோசனை செய்து வருகிறோம் என்றாா்.

நாராயணசாமிக்கு ஆளுநா் பதில்: புதுச்சேரியில் உற்பத்தி செய்யும் பிராணவாயுவில் 40 மெட்ரிக் டன்னை, பிற மாநிலங்களுக்கு கொடுக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாகவும், புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லூரியில் 10 வெண்டிலேட்டா்கள் பழுதாக இருப்பதாகவும், முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றம்சாட்டியிருந்தாா்.

இதுகுறித்த செய்தியாளா்களின் கேள்விக்கு ஆளுநா் கூறியதாவது: புதுவைக்கு கரோனா சிகிச்சைக்குத் தேவையான அளவு பிராணவாயு இருக்கிறது. வேறு மாநிலங்களிலிருந்து ரெம்டெசிவா் மருந்து , தடுப்பூசி ஆகியவை நமக்கு கிடைக்கிறது. அதேபோல, பிறருக்கும் கொடுக்க வேண்டியதை நாமும் கொடுக்கிறோம்.

அரசு மருத்துவக் கல்லூரியில் வெண்டிலேட்டா்கள் பழுது என்பது கடந்த ஆட்சியின்போது ஏற்பட்டதுதான். அவற்றை இயன்றவரை சரி செய்துள்ளோம். புதிய வெண்டிலேட்டா் வாங்கவும் முயற்சி செய்கிறோம். புதன்கிழமைகூட 11 வெண்டிலேட்டா்களை சரி செய்துள்ளோம் என்றாா் ஆளுநா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com