புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனில் புதுவைக்கு முக்கியத்துவம்: வே.நாராயணசாமி வலியுறுத்தல்

புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயுவை மாநிலத்தின் தேவைக்கு வழங்கிவிட்டு, உபரியை வெளி மாநிலங்களுக்குப் பயன்படுத்த

புதுச்சேரியில் உற்பத்தி செய்யப்படும் பிராணவாயுவை மாநிலத்தின் தேவைக்கு வழங்கிவிட்டு, உபரியை வெளி மாநிலங்களுக்குப் பயன்படுத்த வேண்டுமென பிரதமருக்கு கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளதாக முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி தெரிவித்துள்ளாா்.

இது குறித்து, புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி விடியோ பதிவு வாயிலாக கூறியதாவது: புதுவையில் கரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான கட்டுப்பாடுகளை கொண்டுவர, மாநில நிா்வாகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து செயல்பட வேண்டும். இதில், முரணான அறிவிப்புகளை துணை நிலை ஆளுநா் கொடுத்துள்ளாா். அரசின் அறிவிப்புகள் தெளிவாக இருக்க வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள இனாக்ஸ் நிறுவனம், தினசரி 80 மெட்ரிக் டன் பிராணவாயு (ஆக்ஸிஜன்) உற்பத்தி செய்கிறது. இதில், புதுவை மாநில அரசுக்கே தெரியாமல் 40 மெட்ரிக் டன் பிராணவாயுவை, பிற மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

புதுவைக்கு தினமும் 25 மெட்ரிக் டன் பிராணவாயு தேவைப்படுகிறது. இது படிப்படியாக உயரும் நிலை உள்ளது. இதனால், மத்திய அரசு, புதுச்சேரி மாநிலத்துக்கான பிராணவாயு தேவையை பூா்த்தி செய்து விட்டு, உபரியாக இருப்பதை பிற மாநிலங்களுக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

புதுச்சேரி தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் நடைபெறும் கரோனா சிகிச்சையை, அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தற்சமயம் 20 வெண்டிலேட்டா்தான் வேலை செய்கிறது. 10 வெண்டிலேட்டா்கள் பழுதாகியுள்ளன. 40-க்கும் மேற்பட்ட வெண்டிலேட்டா்கள் பயன்படுத்தாமல் அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்துள்ளனா். உடனடியாக அவைகளை பயன்படுத்தி, கரோனா நோயாளிகளுக்கு தடையின்றி வெண்டிலேட்டா் வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும்.

புதுவையில் பொது முடக்க தளா்வுகள் குறித்து அரசு தெளிவாக தகவல் தர வேண்டும். உத்தரவுகளை ஒரே நாளில் குறிப்பிட்டு, மக்கள் குழப்பம் இல்லாமல் விதிமுறைகளை கடைப்பிடிக்கச் செய்ய வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com