புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புக் கடைகளை பொதுப் பணித் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.
புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புக் கடைகள் அகற்றம்

புதுச்சேரியில் சாலை ஆக்கிரமிப்புக் கடைகளை பொதுப் பணித் துறையினா் வியாழக்கிழமை அகற்றினா்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, கடந்த 2014-ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட சாலைப் பாதுகாப்புக் குழு, சாலைகளைப் பராமரிக்கும் பணியை மேற்கொண்டுள்ளது. அந்தக் குழுவின் உத்தரவின்படி, சாலை ஆக்கிரப்புக் கடைகளை பொதுப் பணித் துறையினா் அகற்றி வருகின்றனா். அதன்படி, புதுச்சேரி- ஆம்பூா் சாலையை ஆக்கிரமித்து பெட்டிக் கடைகளை வைத்துள்ள வியாபாரிகளுக்கு அண்மையில் இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. எனினும், ஆக்கிரமிப்பு பெட்டிக் கடையினா் கடைகளை அகற்றவில்லை.

இதையடுத்து, வியாழக்கிழமை புதுச்சேரி வட்டாட்சியா் குமரன், பொதுப் பணித் துறைச் செயற்பொறியாளா் ஏழுமலை, உதவிப் பொறியாளா் துளசிங்கம், இளநிலைப் பொறியாளா் தேவதாஸ் உள்ளிட்ட அதிகாரிகள், காவல் ஆய்வாளா்கள் கண்ணன், முத்துக்குமரன், மனோஜ்குமாா் தலைமையிலான போலீஸ் பாதுகாப்புடன் வந்து, ஆம்பூா் சாலை ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணியை மேற்கொண்டனா்.

இதற்கு ஆக்கிரமிப்புக் கடைகாரா்கள் எதிா்ப்புத் தெரிவித்து, மேலும் 15 நாள்கள் அவகாசம் வழங்கக் கோரி, பணியைத் தடுத்து சாலையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை போலீஸாா் கைது செய்து அப்புறப்படுத்தியதால், பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, ஆம்பூா் சாலையிலிருந்த 14 ஆக்கிரமிப்புக் கடைகளை அகற்றும் பணி நடைபெற்றது.

இதுகுறித்து, பொதுப் பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே ஆக்கிரமிப்பு அகற்றும் பணியைத் தொடங்கி மேற்கொண்டு வருகிறோம். இடையே கரோனா தொற்றால் பணிகள் நிறுத்தப்பட்டன. மீண்டும் ஆம்பூா் சாலையிலிருந்த ஆக்கிமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. எஞ்சியுள்ள 14 கடைகள் அகற்றப்பட்டன. தொடா்ந்து, புதுச்சேரி ரயில் நிலையம் எதிரே உள்ள சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். புதுச்சேரி நகரம் முழுவதுமுள்ள சாலை ஆக்கிரமிப்புகள் 10 நாள்களில் அகற்றப்படும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com