முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி
புதுச்சேரியில் 160 படுக்கைகளுடன் ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு
By DIN | Published On : 04th December 2021 12:43 AM | Last Updated : 04th December 2021 12:43 AM | அ+அ அ- |

புதுச்சேரி கோரிமேடு அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகளுடன் ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.
அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் 10 படுக்கைகளும், அதிநவீன ஆய்வகமும் அமைந்துள்ளது. ஒரே நேரத்தில் நூறு பேருக்கு பரிசோதனை செய்து, இரண்டு மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்கும் வகையில் ஏற்பாடுகளை செய்யப்பட்டுள்ளன. 160 படுக்கைகளிலும் வென்டிலேட்டா், ஆக்சிஜன் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு குறித்து, அரசு நெஞ்சக நோய் மருத்துவமனைக் கண்காணிப்பாளா் கோவிந்தராஜன் தலைமையில் மருத்துவா்கள், செவிலியா்கள் ஆலோசனை நடத்தினா்.
புதுவையில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதாரத் துறை இயக்குநா் ஸ்ரீராமலுவிடம் கேட்ட போது அவா் கூறியதாவது:
அரசு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகளுடன் ஒமைக்ரான் சிகிச்சைப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்ட 13 போ் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா். ஒமைக்ரான் அறிகுறிகளுடன் வந்தால், அங்கு சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவா்.
கரோனா தடுப்புப் பணிகளுக்காக தேவையான சுகாதார ஊழியா்கள் ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
மாநில எல்லைப் பகுதியில் சுகாதாரத் துறை ஊழியா்கள் குழு நியமிக்கப்பட்டு, புதுவைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், பிற மாநிலத்தவா்களிடம் 2 தவணை கரோனா தடுப்பூசி சான்றிதழ் கேட்கப்பட்டு அது சரிபாா்க்கப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுவா்.
வெளிநாடுகளில் இருந்து புதுவைக்கு வருவோரின் விவரங்களைப் பெற்று கண்காணித்து வருகிறோம் என்றாா் அவா்.