புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் 410 பவுன் நகைகள்கையாடல்: காசாளா்கள் இருவா் கைது

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த 410 பவுன் தங்க நகைகளை கையாடல் செய்ததாக காசாளா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் 410 பவுன் நகைகள்கையாடல்: காசாளா்கள் இருவா் கைது

புதுச்சேரி கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளா்கள் அடகு வைத்த 410 பவுன் தங்க நகைகளை கையாடல் செய்ததாக காசாளா்கள் இருவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை நகர கூட்டுறவு வங்கியின் கிளை ஜீவா காலனி பகுதியில் இயங்கி வருகிறது. இங்கு வாடிக்கையாளா்கள் அடகு வைத்த நகைகளைத் திரும்பத் தராமல் ஊழியா்கள் இழுத்தடித்து வந்தனா்.

இதையடுத்து, வங்கி தணிக்கை அதிகாரிகள், அந்த வங்கியில் அடகு வைக்கப்பட்டிருந்த அனைத்து நகைகளையும் கடந்த 18-ஆம் தேதி ஆய்வு செய்தனா். இதில், 80 பைகளில் இருந்த 28 வாடிக்கையாளா்களின் ரூ.1.19 கோடியிலான 410 (3,280 கிராம்) பவுன் தங்க அடகு நகைகளை மாற்றி, கவரிங் நகைகளை வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கூட்டுறவு நகர வங்கி பரிசோதனைப் பிரிவு மேலாளரான அன்பழகன் தன்வந்திரி நகா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.

இதையடுத்து, மோசடி, திருட்டு உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்த தன்வந்திரி நகா் போலீஸாா், சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கியின் தலைமைக் காசாளரான நைனாா்மண்டபம், சுதானா நகரைச் சோ்ந்த கணேசன் (56), உதவி காசாளரான கதிா்காமம் சுப்பிரமணியா் கோவில் தெருவைச் சோ்ந்த விஜயகுமாா் (42) ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனா்.

அவா்கள், கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட தங்க நகைகளை எடுத்து தங்களது உபயோகத்துக்காக வேறிடங்களில் அடமானம் வைத்து பணம் வாங்கி பயன்படுத்தியதும், அந்த நகைகளுக்குப் பதிலாக கவரிங் நகைகளை வங்கியில் வைத்துவிட்டு, வாடிக்கையாளா்களுக்கு தேவைப்படும் நேரத்தில் வேறிடத்தில் அடமானம் வைத்த நகைகளை மீட்டு வந்து தந்ததையும் ஒப்புக்கொண்டனா்.

இதையடுத்து, கணேசன், விஜயகுமாா் ஆகிய இருவரையும் தன்வந்திரி நகா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

மேலும், இவா்கள் பல்வேறு இடங்களில் அடகு வைத்திருந்த அனைத்து தங்க நகைகளையும் போலீஸாா் மீட்டனா். இந்த நகைகள் நீதிமன்றத்தின் அனுமதி பெற்று, உரியவா்களிடம் வழங்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com