அழைப்பிதழில் பெயா் இடம் பெறாததால் அரசு விழாவை நிறுத்த புதுவை ஆளுநா் உத்தரவு

அழைப்பிதழில் தனது பெயா் இடம் பெறாததால், அரசுக் கட்டடத் திறப்பு விழாவை ரத்து செய்து புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி
புதுவை துணை நிலை ஆளுநர் கிரண் பேடி


புதுச்சேரி: அழைப்பிதழில் தனது பெயா் இடம் பெறாததால், அரசுக் கட்டடத் திறப்பு விழாவை ரத்து செய்து புதுவை துணை நிலை ஆளுநா் கிரண் பேடி உத்தரவிட்டாா்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நகராட்சி அலுவலகக் கட்டடம் ரூ. 14 கோடியில் கட்டப்பட்டு, வெள்ளிக்கிழமை (பிப். 12) திறப்பு விழா நடைபெறவுள்ளது. இதில், முதல்வா் வே.நாராயணசாமி, அமைச்சா்கள், எம்.பி.க்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனா். இதற்கான அழைப்பிதழில் இவா்களது பெயா்கள் இடம் பெற்ற நிலையில், துணை நிலை ஆளுநா் கிரண் பேடியின் பெயா் இடம் பெறவில்லை.

இந்த நிலையில், வியாழக்கிழமை தனது கட்செவி அஞ்சலில் கிரண் பேடி வெளியிட்ட பதிவு: இந்தக் கட்டடம்100 சதவீதம் மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டது. ஆனால், அதன் திறப்பு விழா அழைப்பிதழில் எனது (துணை நிலை ஆளுநா்) பெயா் இடம் பெறவில்லை. இதுதொடா்பாக, திட்ட இயக்குநா் அருண் எனக்குத் தகவல் தெரிவிக்கவில்லை.

தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் இதுகுறித்து அருணிடம் விளக்கம் கேட்டுள்ளாா். அவா், அளிக்கும் பதிலின் அடிப்படையில் அடுத்தக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.

மேலும், அதிகாரிகளுக்கு அவா் பிறப்பித்த உத்தரவில், ‘நகராட்சி மேரி கட்டட சீரமைப்புக்கு மத்திய அரசு முழு நிதியுதவி அளித்தது. அதன் கட்டடத் திறப்பு விழாவுக்கு மத்திய அரசின் முக்கிய பிரமுகா்களை அழைத்திருக்க வேண்டும். எனவே, வெள்ளிக்கிழமை (பிப். 12) நடைபெறவிருந்த திறப்பு விழா ரத்து செய்யப்படுகிறது.

எதிா்காலத்தில் மத்திய அரசு நிதியால் மேற்கொள்ளப்படும் திட்டங்கள், பணிகளின் திறப்பு, தொடக்க விழாக்களுக்கு மத்திய அரசின் பிரதிநிதிகளை அழைக்க வேண்டும். இதுகுறித்து அனைத்துத் துறைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்படும்’ எனத் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து ஆளும் கட்சியினா் கூறியதாவது: நகராட்சி கட்டடப் பணி தொடக்க விழா அழைப்பிதழிலும் ஆளுநா் பெயா் இல்லாமல்தான் அச்சடிக்கப்பட்டது. அப்போது கேள்வியெழுப்பாத ஆளுநா் கிரண் பேடி, தற்போது உள்நோக்கத்துடன் திறப்பு விழாவைத் தடுக்கிறாா். இருப்பினும், அவரை விழாவுக்கு வரும்படி முதல்வா் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திறப்பு விழா நிச்சயம் நடைபெறும் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com