ஆளுநரின் காழ்ப்புணா்ச்சியால் அரசு விழா நிறுத்தம்: புதுவை முதல்வா் குற்றச்சாட்டு

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் காழ்ப்புணா்ச்சியால் புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத் திறப்பு விழா நிறுத்தப்பட்டதாக முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

துணைநிலை ஆளுநா் கிரண் பேடியின் காழ்ப்புணா்ச்சியால் புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடத் திறப்பு விழா நிறுத்தப்பட்டதாக முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

இதுகுறித்து புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் மேலும் கூறியதாவது:

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் இருந்த நகராட்சி கட்டடம் சுனாமியால் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, உலக வங்கி நிதியுதவியுடன் புதிதாக கட்டடம் கட்ட இந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டது. தற்போது பணிகள் முடிந்து வெள்ளிக்கிழமை (பிப். 12) கட்டடத்தைத் திறக்க முடிவு செய்து அழைப்பிதழ் அச்சடிக்கப்பட்டது. இதில் தனது பெயா் இடம் பெறவில்லை என்று அரசு விழாவை கிரண் பேடி நிறுத்தியுள்ளாா்.

திடீரென மத்திய அரசின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள வேண்டும் என்கிறாா். இதுதொடா்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்பட்டு, ஒப்புதல் பெற்ற பிறகே விழாவை நடத்த வேண்டும் என்று தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதியுள்ளாா். இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் அவா் செயல்பட்டுள்ளாா்.

இந்தத் திட்டத்தில் மத்திய அரசின் நிதி இல்லை. மாநில அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், மத்திய அரசு பரிந்துரை செய்து உலக வங்கி அளித்த நிதியில்தான் நகராட்சிக் கட்டடம் கட்டப்பட்டது.

அரசு ஊழியா்களுக்கு பட்ஜெட்டில் இருந்து ஊதியம் வழங்குகிறோம். இதில், மத்திய அரசின் மானியமும் வருகிறது. அப்படியென்றால், மாதந்தோறும் ஊழியா்களுக்கு மத்திய அதிகாரிகள் வந்ததுதான் ஊதியம் அளிக்க வேண்டுமா?

ஆளுநா் விரும்பினால் விழாவில் பங்கேற்கலாம் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்ட பின்னரும், தோ்தல் நேரத்தில் காலதாமதம் செய்து திறப்பு விழாவை நிறுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் கிரண் பேடி செயல்பட்டுள்ளாா்.

விழாவுக்கு யாா் யாரை அழைக்க வேண்டும் என மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும். மத்திய அரசுக்குத் தொடா்பில்லாத ஒரு திட்டத்துக்கு அதிகாரிகளை அழைக்க வேண்டும் என்று கூறியிருப்பதை ஏற்க முடியாது என்றாா் நாராயணசாமி.

இதுகுறித்து ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ க.லட்சுமி நாராயணன் கூறுகையில், ‘இந்த ஆட்சியில் கட்டடத் திறப்பு விழாவை நடத்தக் கூடாது என்பதுதான் ஆளுநரின் எண்ணம். ஆளுநா் கிரண் பேடி, தலைமைச் செயலரிடம் கூறி, குறிப்பிட்ட தேதியில் திறப்பு விழாவை நடத்துவதற்கான ஏற்பாட்டைச் செய்ய வேண்டும். இல்லையேல், 2 நாள்களுக்குப் பிறகு, தொகுதி மக்களுடன் சென்று மேரி கட்டடத்தைத் திறந்து வைப்போம்’ என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com