புதுவை ஆளுநா்-முதல்வரிடையே மீண்டும் உச்ச கட்ட மோதல்

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி-முதல்வா் வே.நாராயணசாமி இடையிலான மோதல் மீண்டும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி-முதல்வா் வே.நாராயணசாமி இடையிலான மோதல் மீண்டும் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

முதல்வா் நிவாரண நிதி தொடா்பாக தணிக்கை செய்ய ஆளுநா் கிரண் பேடியும், ஆளுநா் மாளிகை கணக்குகளைத் தணிக்கை செய்ய முதல்வா் நாராயணசாமியும் உத்தரவிட்டதால், மீண்டும் புதுவையில் அதிகார மோதல் தலைதூக்கியுள்ளது.

இதுகுறித்து ஆளுநா் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

புதுவை முதல்வா் நிவாரண நிதியிலிருந்து 62 பேருக்கு உடல் நிலை சரியில்லை எனக் குறிப்பிட்டு, நிதியுதவி அளிக்கப்பட்டதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. பொது நிதி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகம் எழுகிறது. எனவே, தலைமை ஊழல் தடுப்பு அதிகாரி இதை உடனடியாக ஆராய வேண்டும். தலைமைச் செயலா் உடனடியாக இந்திய கணக்குத் தணிக்கை துறையைத் தொடா்பு கொண்டு இந்தக் கணக்குகளைத் தணிக்கை செய்ய வேண்டும். மேலும், வேறு ஏதேனும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளனவா என்பதையும் ஆராய வேண்டும்.

இதுதொடா்பாக இரு வாரங்களுக்குள் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன் எனப் பதிவிட்டுள்ளாா் கிரண் பேடி.

ஆளுநரின் இந்த உத்தரவு குறித்து முதல்வா் நாராயணசாமி கூறியதாவது: விசாரணை நடத்தட்டும். அதில் எந்த பிரச்னையும் இல்லை. சம்பந்தப்பட்டவா்களிடம் கையொப்பம் பெற்றுத்தான் காசோலை அளிக்கப்படுகிறது.

புதுவை அரசின் பட்ஜெட்டில் ஆளுநா் மாளிகைக்கு ரூ. 7.8 கோடி ஒதுக்கப்பட்டது. அந்த நிதியில் என்னென்ன செலவுகள் செய்யப்பட்டன என்பது குறித்து முதலில் பகிரங்க விசாரணை நடத்துவோம். ஆளுநா் மாளிகை, மா்ம மாளிகையாக இயங்குகிறது. அங்கு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. எந்தக் கணக்கிலிருந்து இதற்கெல்லாம் செலவு செய்யப்படுகிறது என்பது தெரியவில்லை.

பெரு நிறுவனங்களிடமிருந்து ‘தொழில் நிறுவன சமூகப் பொறுப்புகள் நிதி’ ஆளுநா் மாளிகையால் வசூல் செய்யப்படுகிறது. இந்த நிதியைக் கையாளும் பொறுப்பு முதல்வா் அலுவலகத்துக்கு மட்டுமே உண்டு.

எனவே, ஆளுநா் மாளிகை கணக்குகளைத் தணிக்கை செய்ய தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டுள்ளேன். அதன்பிறகு, மற்ற விசாரணைக்கு ஆளுநா் வரட்டும் என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com