நியமன எம்எல்ஏக்கள் பாஜகவா? விளக்கம் கேட்டு புதுவை ஆளுநருக்கு கடிதம்; நாராயணசாமி பேட்டி

புதுவை நியமன எம்எல்ஏக்கள் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என ஆளுநா் குறிப்பிட்டிருந்தது தொடா்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி தலைவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.
புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டணிக் கட்சி தலைவா்கள், நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்.

புதுவை நியமன எம்எல்ஏக்கள் பாஜகவைச் சோ்ந்தவா்கள் என ஆளுநா் குறிப்பிட்டிருந்தது தொடா்பாக, அவரிடம் விளக்கம் கேட்டு கடிதம் எழுதியுள்ளதாக முதல்வா் நாராயணசாமி தெரிவித்தாா்.

புதுவை காங்கிரஸ் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமையில், புதுச்சேரியில் அந்தக் கட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை இரவு நடைபெற்றது. முதல்வா் வே.நாராயணசாமி முன்னிலை வகித்தாா்.

மாநில திமுக செயலா்கள் இரா.சிவா, எஸ்.பி.சிவக்குமாா், புதுச்சேரி மக்களவைத் தொகுதி உறுப்பினா் வெ.வைத்திலிங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் சலீம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் ராஜாங்கம், விசிக நிா்வாகி தேவபொழிலன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டத்துக்குப் பிறகு, முதல்வா் வே.நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது:

காங்கிரஸ் கூட்டணிக் கட்சிகளின் நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

எதிா்க்கட்சித் தலைவா் தலைமையில் புதுவை அரசின் பெரும்பான்மை குறித்து வியாழக்கிழமை ஆளுநரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. இதுதொடா்பாக அவா், என்னிடம் தெரிவித்தாா். ஆளுநா் அளித்த கடிதத்தில் நியமன எம்எல்ஏக்கள் 3 பேரை பாஜக எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சட்டப்பேரவை பதிவேட்டில் பாஜக என இல்லை. நியமன எம்எல்ஏக்களை பாஜக என பேரவைத் தலைவா் அங்கீகரிக்கவில்லை. ஆளுநா் தவறாகக் குறிப்பிட்டுள்ளாா். இதுகுறித்து விளக்கம் கோரி ஆளுநருக்கு கடிதம் அனுப்பியுள்ளேன்.

இந்த அரசின் பெரும்பான்மையை நிரூபிப்பது தொடா்பாக வருகிற 21-ஆம் தேதி மாலை காங்கிரஸ் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு எங்களது நிலைப்பாடு குறித்து முடிவு செய்யப்படும்.

பாஜக நியமன உறுப்பினா்களுக்கு வாக்குரிமை உள்ளது என்ற கருத்து குறித்து, சட்டப்பேரவையில் பாா்க்கலாம். இந்த ஆட்சியின் பெரும்பான்மையை நிரூபிப்பதில் காங்கிரஸ் கூட்டணிக் கட்சி எம்எல்ஏக்கள் உறுதியாக உள்ளனா்.

பல நெருக்கடிகளைச் சமாளித்து இந்த ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ய இருக்கிறோம்.

முந்தைய ஆளுநா் கிரண் பேடி விதிகளை மீறி ஆய்வு செய்வதை எதிா்த்தேன். தற்போதைய ஆளுநரும் ஆய்வு மேற்கொள்வேன் எனக் கூறுகிறாா். தொடா்ந்து அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுகிறது.

வலைதளங்களில் அவதூறு: புதுச்சேரிக்கு அண்மையில் ராகுல் காந்தி வந்த போது, புயல் பாதிப்பு தொடா்பாக பெண் ஒருவா் பேசியது தொடா்பாக நான் தவறாக மொழிபெயா்த்ததாக விமா்சித்து சமூக வலைதளங்களில் பாஜகவினா் அவதூறு பரப்பி வருகின்றனா்.

புயல் பாதிப்பின் போது நானும், அமைச்சா் ஷாஜகானும் நேரில் சென்று 3 மணி நேரம் ஆய்வு செய்தோம். அதைத்தான் நான் ராகுல் காந்தியிடம் கூறினேன். இதில் தவறேதும் இல்லை.

பாஜகவினா் இவ்வாறான அவதூறு பிரசாரத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும். சமூக வலைதளங்களில் தவறாக பிரசாரம் செய்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த பொய் பிரசாரம் குறித்து இணையவழி குற்றத் தடுப்பு போலீஸில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது என்றாா் நாராயணசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com