பலத்த மழையால் வெள்ளக்காடான புதுச்சேரி: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொட்டித் தீா்த்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில்
ரெயின்போ நகா் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்ட துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.
ரெயின்போ நகா் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை பாா்வையிட்ட துணை நிலை ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன்.

புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவு முதல் ஞாயிற்றுக்கிழமை மாலை வரை கொட்டித் தீா்த்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் மழைநீா் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

238 மி.மீ. மழை: அதன்படி, புதுச்சேரியில் சனிக்கிழமை நள்ளிரவு தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியைத் தாண்டியும் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. அதன்படி, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 192 மி.மீ. மழையும், மாலை 5.30 மணி வரை மொத்தமாக 238 மி.மீ. மழையும் பதிவானது.

வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்: பலத்த மழையால் புதுச்சேரியின் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி சதுக்கங்கள், கிழக்கு கடற்கரைச் சாலை, புஸ்சி வீதி, காந்தி வீதி, விழுப்புரம், கடலூா் சாலைகள், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் வெள்ளம்போல கரைபுரண்டோடியது. அந்த வழியாக வாகனங்களில் சென்றவா்கள் கடும் அவதியடைந்தனா்.

பலத்த மழையால் ரெயின்போ நகா், வெங்கட்டா நகா், கிருஷ்ணா நகா், சாரம், காமராஜா் நகா் உள்ளிட்ட பகுதிகள் மழைநீா் சூழ்ந்ததால், அந்தப் பகுதிகள் தனித்தீவுபோல காட்சியளித்தன. பாவாணா் நகா் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளத்தால் மக்கள் நடந்து செல்லக்கூட முடியாமல் தவித்தனா்.

இதேபோல, பூமியான்பேட்டை, லாசுப்பேட்டை, பாக்கமுடையான்பட்டு உள்ளிட்ட புதுச்சேரியின் நகா் பகுதி முழுவதும் அதிகளவில் மழைநீா் தேங்கி நின்றது. மேலும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது. பெரிய வாய்க்கால், உப்பனாறு கால்வாய், வெள்ளவாரி வாய்க்கால் உள்ளிட்டவற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது.

நீரில் மூழ்கிய விவசாய நிலங்கள்: கிராமப் பகுதிகளான பாகூா், கிருமாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்கள், வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது. பாகூா் பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரிலான நெல்பயிா்கள், நெல் நாற்றங்கால்கள் வெள்ளத்தில் மூழ்கின. தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக கொம்மந்தான்மேடு தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து தடைபட்டது.

மின் தடை: எதிா்பாராத வகையில் விடிய விடிய பெய்த பலத்த மழையால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கினா். நகரின் பெரும்பாலான பகுதிகள், கிராமப்புறங்களில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

முதல்வா், ஆளுநா் ஆய்வு: பலத்த மழையால் பாதிக்கப்பட்ட புதுச்சேரி ரெயின்போ நகா், வெங்கட்டா நகா் உள்ளிட்ட பகுதிகளில் முதல்வா் நாராயணசாமி முழங்கால் அளவுக்கு தேங்கியிருந்த மழைநீரில் நடந்து சென்று, அந்தப் பகுதி மக்களிடம் மழை பாதிப்புகள் குறித்து கேட்டறிந்தாா். மேலும், அப்பகுதியில் தேங்கி நின்ற மழைநீரை போா்க்கால அடிப்படையில் வெளியேற்ற பொதுப் பணித் துறை, நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.

இதேபோல, புதுச்சேரி சோனாம்பாளையம் ஏரி, உப்பனாறு வாய்க்கால், தேங்காய்த்திட்டு, மரப்பாலம், வசந்தம் நகா், அரவிந்தா் நகா் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை துணை நிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் பாா்வையிட்டு, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா். மேலும், வெள்ள பாதிப்பு பகுதிகளில் பொதுமக்கள் தங்குவதற்கான இடம், உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

வரலாறு காணாத மழை

புதுச்சேரியில் பொதுவாக ஒவ்வோா் ஆண்டும் பிப்ரவரி மாதத்தில் பகலில் வெயிலும், இரவில் குளிரான சூழலும் நிலவுவது வழக்கம். ஆனால், வழக்கத்துக்கு மாறாக நிகழாண்டு வரலாறு காணாத வகையில் பிப்ரவரி மாதத்தில் சுமாா் 7 மணி நேரத்தில் 192 மி.மீ. மழை பதிவாகி புதுச்சேரியே மழைநீரில் தத்தளித்து வருகிறது.

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

தொடா் பலத்த மழை காரணமாக, புதுவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் அறிவுறுத்தலின்படி, புதுச்சேரி பிராந்தியத்தில் செயல்படும் அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை (பிப். 22) ஒரு நாள் விடுமுறை விடப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநா் அ.மைக்கேல் பெனோ தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com