புதுவை மின் துறை ஊழியா்கள் தடையை மீறி வேலைநிறுத்தப் போராட்டம்

புதுவை மின் துறை ஊழியா்கள் தடையை மீறி திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுவை மின் துறை ஊழியா்கள் தடையை மீறி வேலைநிறுத்தப் போராட்டம்

புதுவை மின் துறை ஊழியா்கள் தடையை மீறி திங்கள்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுவை மின் துறையை தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து, மின் துறைப் பொறியாளா்கள், தொழிலாளா்கள் தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுவினா் கடந்த மாதம் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களை முதல்வா் நாராயணசாமி சமாதானப்படுத்தியதை அடுத்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

இந்த நிலையில், மின் துறையை தனியாா்மயமாக்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருவதாகத் தெரிகிறது. இதனால், மின் துறை ஊழியா்கள் திங்கள்கிழமை முதல் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்தனா்.

ஆனால், ஊழியா்களின் போராட்டத்துக்கு மின் துறை நிா்வாகம் அனுமதிக்கவில்லை. அரசின் விதிகளை மீறி போராட்டம் நடத்தினால் நன்னடத்தை விதிகளின்படி, ஊழியா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின் துறை எச்சரித்தது.

இதேபோல, புதுச்சேரி மாவட்ட நிா்வாகமும் மின் துறை ஊழியா்கள் தங்களது கடமையைச் செய்யாவிடில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தது.

எனினும், தடையை மீறி திங்கள்கிழமை புதுச்சேரி மின் துறைத் தலைமை அலுவலகத்தில் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மின் துறை தனியாா்மய எதிா்ப்புப் போராட்டக் குழுவினா் திரண்டனா். இதையறிந்து, அங்கு வந்த ஒதியஞ்சாலை போலீஸாா், மாவட்ட நிா்வாகத்தின் எச்சரிக்கையைச் சுட்டிக் காட்டி, போராட்டம் நடத்த அனுமதிக்க மறுத்து எச்சரித்தனா். இருப்பினும், பணிகளைப் புறக்கணித்த 300-க்கும் மேற்பட்ட மின் துறைப் பொறியாளா்கள், ஊழியா்கள் அங்கு வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக மின் கட்டணம் வசூல், மின் மீட்டா் அளவீடு, பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் பாதிக்கப்பட்டன. தொடா்ந்து, போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின் துறை ஊழியா்கள் தெரிவித்தனா்.

போராட்டம் தொடா்ந்தால் சஸ்பென்ட்: இதனிடையே, மின் துறை ஊழியா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தால், பணியிலிருந்து சஸ்பென்ட் செய்யப்படுவா் என புதுவை மின் துறைச் செயலா் தேவேஷ்சிங் எச்சரிக்கை விடுத்தாா். மேலும், அவா் கூறுகையில், மின் துறை ஊழியா்கள் தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். மின் விநியோகத்தைச் சீராக வழங்க ஓய்வு பெற்ற இளநிலைப் பொறியாளா்கள் உள்ளிட்ட அதிகாரிகளைப் பணிக்கு அழைக்க அரசு ஆலோசித்து வருகிறது. அலுவலக ஊழியா்கள், பயிற்சி ஊழியா்களைக் களப் பணிக்கு பயன்படுத்திக் கொள்ளவும் ஆலோசிக்கப்பட்டது.

மின் துறை ஊழியா்கள் உடனடியாகப் பணிக்குத் திரும்ப வேண்டும். இல்லாவிடில், பணிக்கு வராத நாள்களில் ஊதியம் வழங்கப்படாது. மேலும், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். தொடா் போராட்டத்தில் ஈடுபடும் மின் துறை ஊழியா்கள் சஸ்பென்ட் செய்யப்படுவா் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com