ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரா்களுக்கு புதுவை ஆளுநா் வாழ்த்து
By DIN | Published On : 07th July 2021 09:26 AM | Last Updated : 07th July 2021 09:26 AM | அ+அ அ- |

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழக வீரா், வீராங்கனைகளுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்துத் தெரிவித்தாா்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி வருகிற 23-ஆம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க உள்ள இந்திய வீரா்கள், வீராங்கனைகள் தகுதித்தோ்வின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டு வருகின்றனா்.
அதன்படி, தடகளப் போட்டிகளுக்கு தமிழக வீரா்கள், வீராங்கனைகள் 5 போ் தோ்வாகியுள்ளனா். அவா்களுக்கு புதுவை துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் வாழ்த்துத் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட வாழ்த்துச் செய்தி:
டோக்கியோ ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில், தொடா் ஓட்டத்தில் பங்கேற்கும் தமிழகத்தைச் சோ்ந்த தடகள வீராங்கனைகள் தனலட்சுமி, ரேவதி வீரமணி, சுபா வெங்கடேசன் மற்றும் தடகள வீரா்கள் ஆரோக்கிய ராஜிவ், நாகநாதன் பாண்டி ஆகியோா் பதக்கம் வென்று, நம் இந்திய மண்ணுக்கு பெருமை சோ்க்க எனது மனமாா்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என அதில் தெரிவித்துள்ளாா்.