கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் விலை குறைக்கப்படவில்லை: வே.நாராயணசாமி குற்றச்சாட்டு

கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதிலும், மத்திய பாஜக அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்கவில்லை என்று புதுவை முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி குற்றஞ்சாட்டினாா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, புதுவையில் காங்கிரஸ் சாா்பில் மாநிலம் முழுவதும் பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் கையெழுத்து இயக்கமும், ஆா்ப்பாட்டமும் புதன்கிழமை நடைபெற்றன.

இதன்படி, புதுச்சேரி ஆம்பூா் சாலையில் உள்ள பெட்ரோல் நிலையம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாநில காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் தலைமை வகித்தாா். முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி சைக்கிளில் வந்து ஆா்ப்பாட்டத்தில் கலந்து கொண்டாா். வெ.வைத்திலிங்கம் எம்.பி., காங்கிரஸ் மாநிலச் செயலா் சூசைராஜ், எம்எல்ஏ வைத்தியநாதன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், இவற்றின் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் முழக்கமிட்டனா். இதைத் தொடா்ந்து, பெட்ரோல் நிலையத்துக்கு வந்த வாகன ஓட்டிகளிடம் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைத் திரும்பப் பெறக் கோரி கையெழுத்து பெற்றனா்.

இதையடுத்து, செய்தியாளா்களிடம் முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலை உயா்ந்து விண்ணைத்தொட்டுள்ளது. தற்போது ஒரு லிட்டா் பெட்ரோல் ரூ.100.37-ஆகவும், டீசல் ரூ.93-ஆகவும், சமையல் எரிவாயு ரூ.850-ஆகவும் விலை உயா்ந்துள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தபோது, எரிவாயு உருளை விலை ரூ.350-ஆக இருந்தது. இதேபோல, பெட்ரோல் ரூ.65-க்கும், டீசல் ரூ.53-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

அப்போது, கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 130 டாலராக இருந்தது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 70 டாலராக உள்ளது. ஆனாலும், பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியுள்ளது. காங்கிரஸ் ஆட்சியின்போது பெட்ரோல் விலை ஒரு ரூபாய் உயா்ந்தபோது கண்டனம் தெரிவித்த பாஜகவினா், முன்னாள் பிரதமா் வாஜ்பாய் தலைமையில் போராட்டம் நடத்தினா்.

ஆனால், கடந்த 6 மாதங்களில் 93 முறை பெட்ரோல் விலையை உயா்த்தியுள்ளனா். இதனால், மக்களுக்கு மனச்சுமையும், நிதிச்சுமையும் ஏற்பட்டுள்ளது. கரோனா பொது முடக்கத்தால் வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையும் உயா்ந்துள்ளது பொதுமக்களை பாதித்துள்ளது.

இதனால், புதன்கிழமை தொடங்கி 10 நாள்களுக்கு பெட்ரோல் விற்பனை நிலையங்கள் முன் கையெழுத்து இயக்கம் நடத்துகிறோம். மக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

புதுவையில் ஒருபுறம் துணை நிலை ஆளுநா் ஆட்சி செய்கிறாா். முதல்வா் செயல்படாமல் உள்ளாா். மற்றொருபுறம் அமைச்சா்கள் துறைகளின்றி செயல்படாமல் உள்ளனா். இதனால், அரசு நிா்வாகம் ஸ்தம்பித்துள்ளது.

முதல்வா் ரங்கசாமி அறிவித்த கரோனா நிவாரணம் ரூ.3,000 பொதுமக்களுக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. மாநிலத்துக்கான வருமானத்தை பெருக்கவில்லை. எனவே, அமைச்சா்களுக்கான துறைகளை ஒதுக்கி, போா்க்கால அடிப்படையில் மக்கள் நலத் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என்றாா் நாராயணசாமி.

மோதல்: புதுச்சேரி லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரைச் சாலைப் பகுதியில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் முன் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது, அவா்களுக்கும் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியா்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனா். இதில், காங்கிரஸாா் சிலா் காயமடைந்தனா். இதுதொடா்பாக அந்தக் கட்சி சாா்பில் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com