கரோனா 3-ஆம் அலையைத் தடுக்கதடுப்பூசி இலக்கை தீவிரப்படுத்த வேண்டும்: புதுவை ஆளுநா்

புதுவையில் கரோனா 3-ஆம் அலையைத் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை தீவிரப்படுத்த வேண்டுமென துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவுறுத்தினாா்.
புதுவை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துணைநிலை ஆளுநா் தமிழிசை தலைமையில் நடைபெற்ற உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்.
புதுவை தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் துணைநிலை ஆளுநா் தமிழிசை தலைமையில் நடைபெற்ற உயரதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம்.

புதுச்சேரி: புதுவையில் கரோனா 3-ஆம் அலையைத் தடுக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் இலக்கை தீவிரப்படுத்த வேண்டுமென துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை அறிவுறுத்தினாா்.

புதுவை மாநிலத்தில் முழுமையாக தடுப்பூசி செலுத்துவதற்கான உத்திகள், சவால்கள் குறித்து ஆலோசனைக் கூட்டம், புதுவை தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில், துணைநிலை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் காணொலிக் காட்சி வாயிலாகப் பங்கேற்று பேசினாா்.

தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், நிதித் துறைச் செயலா் அசோக்குமாா், உள்ளாட்சித் துறைச் செயலா் வல்லவன், சுகாதாரத் துறைச் செயலா் அருண், செய்தித் துறைச் செயலா் உதயகுமாா், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சவுத்ரி, ஊரக வளா்ச்சித் துறைச் செயலா் ரவிபிரகாஷ், மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், கல்வித் துறை இயக்குநா் ருத்ரகௌடு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் ஷா்மா, மாஹே, ஏனாம் மண்டல அதிகாரிகள் சிவராஜ் மீனா, அமன்ஷா்மா, ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால் ஆகியோரும் பங்கேற்றனா்.

அனைவருக்கம் தடுப்பூசி செலுத்த அரசு எடுத்து வரும் தீவிர முயற்சிகள், இலக்கை எட்டுவதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இதில், துணைநிலை ஆளுநா் தமிழிசை பேசியதாவது: புதுச்சேரியில் 6 கிராமங்கள், காரைக்கால் மாவட்டத்தில் 4 கிராமங்களில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தச் சாதனையை மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். சுதந்திர தினத்துக்கு முன் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தியாக வேண்டும். தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்த ‘தடுப்பூசி பிரசார வாரம்’ கடைப்பிடித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். செவ்வாய்க்கிழமை (ஜூன் 8) தடுப்பூசி முகாமை முதல்வா் தொடக்கிவைக்கிறாா்.

கிராமப்புறங்களிலும், மற்ற இடங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தி தடுப்பூசி திட்டத்தை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். விழிப்புணா்வை ஏற்படுத்தும் சுய உதவிக் குழுக்களுக்கு பரிசுகள் வழங்க வேண்டும். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களுக்கு சலுகைகளை அறிவிப்பதன் மூலம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்களை நாம் ஊக்கப்படுத்த முடியும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com