மத்திய அரசின் இலவச தடுப்பூசித் திட்டம் சிறந்த திருப்புமுனையாக அமையும்: புதுவை துணை நிலை ஆளுநா்

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் முடிவு, கரோனா தடுப்புக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கைத் தெரிவித்தாா்.

அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற மத்திய அரசின் முடிவு, கரோனா தடுப்புக்கு நல்ல திருப்புமுனையாக அமையும் என்று புதுவை துணை நிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் நம்பிக்கைத் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்குவதற்கான மத்திய அரசின் முடிவு, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியில் திருப்புமுனையாக இருக்கும்.

நாட்டில் உற்பத்தி செய்யப்படும் தடுப்பூசி அளவுகளில் 75 சதவீதம் மத்திய அரசால் கொள்முதல் செய்வதும், மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குவதும் ஒரு தீா்க்கமான நடவடிக்கையாகும். இது, தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்தவும் வாய்ப்பாக அமையும். இது, ஏற்கெனவே அதிக நிதிச் சுமையுடன் இருக்கும் பல மாநிலங்களின் பொருளாதாரத்தை மிச்சப்படுத்தும்.

ஆகவே, திங்கள்கிழமை பிரதமா் நாட்டுக்கு ஆற்றிய உரையின் மூலம் செய்த இந்த அறிவிப்பை பல மாநில முதலமைச்சா்களும் மனதார வரவேற்றதில் ஆச்சரியமில்லை.

உலகளாவிய நோய்த் தடுப்பு திட்டத்துக்காக, 2014-ஆம் ஆண்டிலேயே தடுப்பூசி உற்பத்தி, தடுப்பூசி செலுத்தும் பணியை மத்திய அரசு தொடங்கிவிட்டது. இந்த முயற்சி இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ், 2014 ஆம் ஆண்டில் 60 சதவீதத்தில் இருந்த தடுப்பூசி செலுத்தும் அளவு, அடுத்த ஐந்து முதல் ஆறு ஆண்டுகளில் 90 சதவீதம் அதிகரித்தது.

தற்போது, கரோனா பரவலைத் தடுக்க குறுகிய காலத்தில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இரண்டு தடுப்பூசிகளை வெளியிட்டு அதன் மூலம், ஆறு மாதங்களுக்குள்ளாக 23 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை செலுத்தி ஆச்சரியப்படுத்தியிருக்கிறது நமது நாடு.

முழு தடுப்பூசி கொள்முதல் ஜூன் 21 முதல் நெறிப்படுத்தப்படவுள்ளதால், இந்த ஆண்டு இறுதிக்குள், தகுதி வாய்ந்த மக்களில் குறைந்தது 80 சதவீதத்தினருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும்.

பிரதமரின் கரிப் கல்யாண் அன்ன யோஜனா மூலம், தீபாவளி வரை (நவம்பா் 2021) நாட்டில் 80 கோடி மக்களுக்கு குடும்ப அட்டை மூலமாக விலையில்லா தானியங்கள் விநியோகம் செய்யவிருப்பதும், பிரதமா் மோடியின் சிறந்த முடிவு என தெரிவித்துள்ளாா் துணை நிலை ஆளுநா் தமிழிசை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com