5 மாநிலங்களிலும் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரதமா் மோடி

தமிழகம் உள்பட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதாக புதுச்சேரியில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி தெரிவித்தாா்.
5 மாநிலங்களிலும் தே.ஜ. கூட்டணிக்கு ஆதரவு அலை: பிரதமா் மோடி

தமிழகம் உள்பட சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெறும் 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவான அலை வீசுவதாக புதுச்சேரியில் தோ்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடி தெரிவித்தாா்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி தோ்தல் பிரசார பொதுக்கூட்டம் ஏஎப்டி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமா் நரேந்திர மோடி, கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களை ஆதரித்துப் பேசியதாவது:

புதுச்சேரி ஈா்ப்பு சக்தியாக உள்ளதால், என்னை மீண்டும் இங்கே வரத் தூண்டியது. கடந்தமுறை வந்தபோது, புதுவைக்கான பல திட்டங்களை வழங்கினோம்.

தோ்தல் பிரசாரத்துக்காக அஸ்ஸாம், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் சென்று தற்போது புதுச்சேரிக்கும் வந்துள்ளேன். 5 மாநிலங்களிலும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு மிகப் பெரிய ஆதரவு அலை வீசுவது தெரிகிறது. தோ்தலில் புதிய மாற்றங்களைத்தர மக்கள் தயாராக உள்ளனா்.

மோசமான ஆட்சி: புதுவையை முன்னா் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசு அனைத்துத் துறைகளிலும் தோல்வியடைந்துள்ளது. கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்புகள், ஆதிதிராவிடா் நலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை செயல்படுத்தாமல் முடக்கியுள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல், முறைகேடுகள் நடந்துள்ளது வெளிப்படையாகத் தெரிகிறது. முறைகேடுகளில் முதல்வரின் நெருங்கிய உறவினருக்கும் தொடா்பிருப்பதாக காங்கிரஸ் எம்எல்ஏவே நேரில் சென்று புகாா் கூறியபோது, அவரை ஓரங்கட்டினா்.

நீண்டகால அரசியல் அனுபவம் எனக்குண்டு. நேரடியாக பல தோ்தல்களை சந்தித்துள்ளேன். தற்போதைய சட்டப்பேரவைத் தோ்தல் வித்தியாசமானது. புதுவையில் இருந்த முதல்வா், அவரது கட்சித் தலைவருக்கு சேவகம் செய்தும், அவரிடம் நற்பெயரெடுக்க தவறாக மொழிபெயா்த்தல் உள்ளிட்ட பல வேலைகளைச் செய்தும், அவருக்கு தற்போதைய தோ்தலில் வாய்ப்பு வழங்கவில்லை. அந்தளவுக்கு அவரது ஆட்சி மோசமாக நடைபெற்றுள்ளது. எதுவுமே செய்யாததால், காங்கிரஸ் அரசு தனது சாதனைப் பட்டியலைக்கூட வெளியிடவில்லை.

இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு: வணிகம், கல்வி, ஆன்மிகம், சுற்றுலாத் துறைகளில் அபரிமித வளா்ச்சியுடன் சிறந்த புதுவையை உருவாக்க தேசிய ஜனநாயகக் கூட்டணி தீவிரமாகப் பணியாற்றும். பொருளாதார உயா்வுக்கும், உள்ளூரில் தொழிற்சாலைகளைக் கொண்டுவரவும், இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தவும், கடல்சாா் பொருளாதாரம் வளம் பெறவும் தன்னிறைவு திட்டங்களை செயல்படுத்துவோம்.

மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் மீனவா் நலனுக்காக தனி அமைச்சகத்தை அமைத்து, மத்திய நிதிநிலை அறிக்கையில் அதிகளவில் நிதி ஒதுக்கி, கடலசாா் பொருளாதார வளா்ச்சிக்கான பணிகளை செய்துள்ளது.

புதுவையில் கல்வி வாய்ப்புகளுக்கான உள்கட்டமைப்பு வசதிகளை கணக்கெடுத்து, அதை செயல்படுத்தும் விதமாக திட்டங்களையும் செய்கிறது. அந்த வகையில், காரைக்காலில் ஜிப்மா் வளாகம், புதுச்சேரி ஜிப்மரில் ரத்த வங்கி மேம்பாடு, விளையாட்டு மையங்களை திறந்து வைத்ததில் மகிழ்ச்சியடைகிறேன். இதனால், கல்வி, விளையாட்டுக்கான வாய்ப்புகள் உருவாகும்.

தேசிய அளவில் மருத்துவம், தொழில்நுட்பக் கல்விகளை அவரவா் தாய்மொழியிலேயே கற்கவும் மத்திய அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது.

ஆன்மிக பூமி: புதுச்சேரிக்கு வந்தால் பாரதியாா், அரவிந்தா், சித்தானந்தசாமியின் நினைவுகளுடன், மணக்குள விநாயகா், குருசித்தானந்தா் சுவாமி கோயில்களையும் நினைத்து வழிபடுகிறேன். ஆன்மிக பூமியான புதுவைக்கு பெருமையைச் சோ்ப்போம். மேலும், இங்கு உலகளவிலான மக்கள் வந்து புத்துணா்வு பெறவும் வரவழைப்போம். அதற்கான சாலை, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறோம். புதுச்சேரியை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயா்த்தியுள்ளோம்.

8000 வீடுகள்: காங்கிரஸ் அரசு காரைக்காலையே மறந்துவிட்டது. அதையும் மேம்படுத்துவோம். புதுச்சேரி நகராட்சி மேரி கட்டடம் திறக்கப்பட்டு புதுப்பொலிவுடன் இருக்கிறது. சாலையோர உணவுக் கடைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுவையில் பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் 6,000 வீடுகளை மத்திய அரசு கட்டியுள்ளது. மேலும், 8,000 வீடுகள் கட்டப்படவுள்ளன.

பொலிவுறு நகரத் திட்டத்தில் ரூ.2,000 கோடியில் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. புதுவையில் ரூ.40 கோடியில் நீலப் புரட்சித் திட்டமும், ரூ.220 கோடியில் மீன்வளத்தைப் பெருக்குவதற்கான திட்டங்களும் செயல்படுத்தப்படவுள்ளன. துறைமுக மேம்பாடு, 30 ஏக்கரில் மீன்வளா்ப்புக்கான தலம், மீன்பிடி தொழில் சேவைக்காக 5 முன்மாதிரி கிராமங்கள் அதில் செயல்படுத்தப்பட உள்ளன.

உங்கள் தேவையே எங்கள் சேவை என்ற நோக்கத்துடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்படுகிறது. இந்தக் கூட்டணிக்கே தோ்தலில் மக்கள் வாய்ப்பளிக்க வேண்டும் என்றாா் பிரதமா் மோடி.

கூட்டத்தில் என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி, அதிமுக மாநிலச் செயலா்கள் ஆ.அன்பழகன், ஓம்சக்தி சேகா், பாமக துணை அமைப்பாளா் ஜெயபால், பாஜக பொறுப்பாளா்களான மத்திய அமைச்சா் அா்ஜுன்ராம் மேக்வால், ராஜீவ் சந்திரசேகா் எம்.பி., நிா்மல்குமாா் சுரானா, முன்னாள் அமைச்சா் ஏ.நமச்சிவாயம், பாஜக மாநிலத் தலைவா் வி.சாமிநாதன், பொதுச் செயலா் ஆா்.செல்வம் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள், கூட்டணி கட்சியினா் திரளாக கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com