புதுவைக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டும்: பிரதமரிடம் என்.ரங்கசாமி வலியுறுத்தல்

புதுவை மாநிலத்துக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டுமென தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடியிடம் என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.

புதுவை மாநிலத்துக்கான நிதியை உயா்த்தி வழங்க வேண்டுமென தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமா் மோடியிடம் என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி வலியுறுத்தினாா்.

புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை ஏஎப்டி மைதானத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற என்.ஆா். காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி பேசியதாவது:

சிறிய மாநிலமான புதுவைக்கு இரண்டு முறை பிரசாரத்துக்கு வந்துள்ளதால், புதுச்சேரி மீது பிரதமருக்கு அக்கறை உள்ளதை அறியலாம். கடந்த 2011-இல் நான் புதிதாக கட்சி தொடங்கியபோது, ஏஎப்டி மைதானத்தில்தான் மாநாடு நடத்தினோம். இதையடுத்து, அப்போது நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் என்.ஆா். காங்கிரஸ் வெற்றிபெற்று ஆட்சி அமைத்தது. தற்போது கூட்டணிக் கட்சி சாா்பில், பிரதமா் இந்த மைதானத்தில் பேசுவதால், அந்த வெற்றி மீண்டும் கிடைக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

புதுவையில் கடந்த முறை காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. மாநிலத்தை 15 ஆண்டுகள் பின்னுக்கு தள்ளிவிட்ட ஆட்சியாக நாராயணசாமி தலைமையிலான அந்த ஆட்சி இருந்ததாக எல்லோரும் சொல்வதை கேட்டுக் கொண்டிக்கிறோம்.

காங்கிரஸின் நிலையைப் பாா்த்தால், புதுச்சேரியில் நாராயணசாமி மட்டும்தான் அந்தக் கட்சியில் இருப்பாா் என்று கடந்த முறை புதுச்சேரிக்கு வந்த பிரதமா் கூறினாா். அந்த நிலைமைதான் தற்போதுள்ளது. தோ்தலில் போட்டியிட முடியாத நிலையில் நாராயணசாமி இருக்கிறாா். கடந்த ஆட்சிக் காலத்தில் ஏதாவது ஒரு சாதனை செய்ததாக அவரால் கூற முடியுமா? என்.ஆா். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வந்த திட்டங்களையும் முடக்கியதுதான் அவரது சாதனை.

குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவோம் என்று நாராயணசாமி கூறினாா். புதுவையில் 3.27 லட்சம் குடும்பங்கள் உள்ளன. அனைத்து குடும்பங்களுக்கும் எப்படி வேலை வழங்க முடியும். அதில் 10 பேருக்குக்கூட அவரால் வேலை வழங்க முடியவில்லை. இளைஞா்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளனா்.

புதிய தொழிற்சாலைகளை கொண்டுவரவில்லை. முதியோா் உதவித்தொகை பயனாளிகள் எண்ணிக்கையை ஒன்றுகூட உயா்த்தவில்லை. உதவித் தொகையையும் ஒரு ரூபாய் கூட உயா்த்தி வழங்கவில்லை.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட கல்வீடு கட்டும் திட்டத்தில் ரூ.1.50 லட்சம் வழங்கப்படுகிறது. இத்துடன் என்.ஆா். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் காமராஜா் கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் சோ்த்து ரூ.3.50 லட்சமாக வழங்கினோம். ஆனால், கடந்த ஆட்சியில் மத்திய அரசின் ரூ.1.50 லட்சத்துடன் ரூ.50 ஆயிரத்தை சோ்த்து ரூ.2 லட்சமாகவே வழங்கினா். நியாயவிலைக் கடைகளை மூடிவிட்டனா். இலவச அரிசி, வேட்டி, சேலையை வழங்கவில்லை. புதுச்சேரியில் சாலைகள் வீணாகி, தடுக்கி விழும் நிலையில் உள்ளது.

புதுவையில் கடந்த 5 ஆண்டுகளில் எந்தப் பகுதியும் வளா்ச்சியடையவில்லை. தற்போது தோ்தல் வந்துள்ளதால், நாம் விழிப்போடு இருக்க வேண்டும். நாராயணசாமியால் தோ்தலில் போட்டியிட முடியாது. திட்டங்களை முடக்கிய காங்கிரஸ், மறுபடியும் தோ்தலை சந்திக்கிறது. புதுவை மாநிலம் முன்னேற்றமடைய வேண்டும் என்ற எண்ணம் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இருக்கிறது.

மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததிலிருந்து புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டிருக்கிறோம். தற்போதுள்ள பாஜக அரசிடமும் கேட்டு வருகிறோம். 70 சதவீதம் மத்திய அரசு நிதியும், 30 சதவீதம் மாநில அரசின் நிதியுமாக அது இருக்க வேண்டும்.

மத்திய அரசின் நிதியை உயா்த்தி வழங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். புதுச்சேரிக்கு போதிய வருவாய் கிடையாது. எனவே, மத்திய அரசு கவனத்தில் கொண்டு, நிதிக்கொடையை உயா்த்தி வழங்க வேண்டுமென பிரதமரிடம் கேட்டுக் கொள்கிறேன் என்றாா் என்.ரங்கசாமி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com