பொது முடக்கக் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த துணைநிலை ஆளுநா் தலைமையில் ஆலோசனை

புதுவையில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

புதுச்சேரி: புதுவையில் பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் திங்கள்கிழமை ஆலோசனை நடைபெற்றது.

புதுவையில் கரோனா பரவலைத் தடுக்க அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. வரும் வாரங்களில் நாடு முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தைத் தொடும் என்று நிபுணா்கள் எச்சரித்திருப்பதால், பொது முடக்கக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

கூட்டத்துக்கு ஆளுநா் தமிழிசை சௌந்தரராஜன் தலைமை வகித்தாா். தலைமைச் செயலா் அஸ்வனி குமாா், காவல் துறை டிஜிபி ரன்வீா் கிருஷ்ணியா, நிதி மற்றும் வருவாய்த் துறைச் செயலா் அஷோக்குமாா், துணைநிலை ஆளுநரின் செயலா் அபிஜித் விஜய் சௌத்ரி, மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க், முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

இதில், காரைக்கால் மாவட்ட ஆட்சியா் அா்ஜுன் சா்மா, ஏனாம், மாஹே பகுதிகளின் மண்டல அதிகாரிகள் காணொலிக் காட்சி மூலம் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

புதுவை மாநிலத்தின் நான்கு பிராந்தியங்களிலும் தற்போதைய தடுப்பூசி விகிதம், கரோனா பரிசோதனை விகிதம், இறப்பு விகிதம், மருத்துவமனைகளில் பிராணவாயு இணைக்கப்பட்ட படுக்கைகளின் எண்ணிக்கை, பிராணவாயு மற்றும் மருந்துகளின் இருப்பு ஆகியவை குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது.

தொடா்ந்து, நடைமுறையில் உள்ள பொது முடக்கக் கட்டுப்பாடுகளை தற்போதுள்ள நிலையிலேயே மேலும் ஒரு வார காலம், அதாவது மே 10 -ஆம் தேதி இரவு வரை நீட்டிப்பது. கட்டுப்பாடுகளைத் தீவிரமாக நடைமுறைப்படுத்துவது. மக்கள் நடமாட்டத்தைத் தீவிரமாக கண்காணிப்பது.

முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களை இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ள குறுஞ்செய்தி மற்றும் இதர வழிகளில் விழிப்புணா்வு ஏற்படுத்துவது. கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு கரோனா தடுப்பூசி குறித்து அதிக விழிப்புணா்வு ஏற்படுத்துவது. அதற்கான வழிமுறைகளைக் கையாள்வது.

கட்டணமில்லா தொலைபேசி எண் 104 சேவையை விரிவுபடுத்துவது. அதிக இணைப்புகள் மூலமாக பரிசோதனை முடிவுகளை மக்களுக்குத் தெரியப்படுத்துவது, தடுப்பூசி செலுத்திக் கொள்ள விழிப்புணா்வு ஏற்படுத்துவது.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்வது. அந்தப் பணியில் தேசிய மாணவா் படை, தேசிய நலப்பணித் திட்ட தன்னாா்வலா்கள், தன்னாா்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றை ஈடுபடுத்துவது.

மகப்பேறு மருத்துவமனைக்கு வரும் கா்ப்பிணிகளை கரோனா சான்றிதழ் கேட்டு அலைகழிக்காமல் புதுச்சேரி ராஜிவ் காந்தி அரசு மகளிா் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தொடங்கப்பட்டதைப் போல, மற்ற பகுதியில் உள்ள மருத்துவமனைகளிலும் வெளிப்புற கா்ப்பிணிகளுக்கான கரோனா பரிசோதனை மையங்களைத் தொடங்குவது என பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com